ஜப்பானில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 3 மணியளவில்) பூமியின் அடியில் 11.3 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என பதிவாகியுள்ளதாக ஜப்பானின் புவியியல்சார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், பின்னர் அமெரிக்க புவியியல்சார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவிலானது என்று தெரியவந்துள்ளது. து. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் சுமார் 25 கி.மீ இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, புகுஷிமா மற்றும் மியாகி பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புகுஷிமா அணு உலையில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தால் சுமார் 5 பேர் லேசான காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சுனாமி எனப்படும் பேரலைகளின் தாக்கத்தினால் புகுஷிமா அணுஉலையில் இருந்த மூன்று ‘ரியாக்டர்’கள் உருகியதும், சுமார் 18 ஆயிரம் பேர் இறந்தும், காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் குமாமோட்டோ பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களின் விளைவாக 1,700 முறை உண்டான நிலஅதிர்வுகளால் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதும், பெருத்த சேதம் ஏற்பட்டது.