ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் ஆகியோர்க்கு இடையிலான முறுகல் நிலை இலங்கையை இருப்பைப் பாதிக்கும்” – பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறுகின்றார்

“ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் போது அந்த நாடு பாரிய சிக்கலை சந்திக்க வேண்டிவரும். இந்த விடயம் இலங்கைக்கும் மிகவும் பொருந்தும். தற்போதைய ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கும் பிரதமர் ரணில் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை இலங்கையின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றைப் பாதிக்கும்”

இவ்வாறு அண்மையில் கொழும்புப் பத்திகையாளர் ஒருவருக்கு வழங்கிய பேட்டியின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ரணில் மைத்திரி மோதல் தீவிரமடைந்துள்ளது. இது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதா? என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்;கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவரது பேட்டி இங்கே முழுமையாக பிரசுரமாகின்றது.

யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்த எங்களால் தமிழ் மக்களுடைய மனங்களை வெல்ல முடியாமல் போனது கவலைக்குரிய விடயமாகும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய அரசாங்க யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கி நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சாவின் இந்திய விஜயத்தின் போது, நீங்களும் அதில் கலந்து கொண்டிருந்தீர்கள். இந்த விஜயத்தின் போது எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன?

பதில்: இந்தியாவின் ”த ஹிந்து” பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா விற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான நட்புறவு, வரலாறு மற்றும் எதிர்காலம் என்பதே தொனிப்பொருளாக இருந்தது.

5 மாநிலங்களின் முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மகிந்த ராஜபக்சா நல்லதொரு உரையையும் ஆற்றினார். இது அவருக்கு சிறந்த விஜயமாக அமைந்தது.

கேள்வி: இந்த விஜயத்தின் போது, இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை, இந்தியா எதிர்பார்க்கின்றதென்பதை நீங்கள் உணர்ந்தீர்களா?

பதில்: அது தொடர்பாக எனக்கு எதுவும் கூறமுடியாது. ஆனால் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாக இந்தியாவிடம் சில நிலைப்பாடுகள் இருக்கின்றதென்பதை என்னால் உணரமுடிந்தது. அது உண்மை. ஆனால் ஆட்சி மாற்றம் என்பது பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது.

கேள்வி: இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, மகிந்த ராஜபக்சா சிறந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோமெனக் கூறினார். ஆனால் அதன்பின்னர் தன்னுடைய தாயாருக்கே வேட்பாளராக வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக நாமல் ராஜபக்சா கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளனவே?

பதில்: இல்லை… இல்லை , அவ்வாறு எப்போதும் கூறவில்லை. இது முற்றிலும் தவறான கருத்தாகும். இது ஊடகங்கள் பரப்பிய பொய்யான கருத்தாகும். இவ்வாறான ஒரு கருத்தை அவர் கூறவில்லையென்பதை நான் பொறுப்புடன் கூறுவேன்.

கேள்வி: ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உங்களுடைய கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிகிறதே…?

பதில்: ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாங்கள் இன்னும் கலந்துரையாடவில்லை. அவ்வாறு கலந்துரையாடும் போதே முரண்பாடுகள் ஏற்படலாம். உங்களுக்கு முரண்பாடு இருப்பதாக விளங்கலாம். ஆனால் எங்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.

உங்களுடைய பத்திரிகையில் பிரச்சினை இருப்பதாக நான் கூறுகின்றேன். ஆனால் நீங்கள் இல்லையென்றே கூறுவீர்கள். நான் வெளியிலிருந்து பார்ப்பதனால் உங்களுடைய பத்திரிகையில் பிரச்சினை இருப்பதாகத் தெரியும்.

அதேபோன்று எவ்விதக் கொள்கைகளுமின்றி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பேச முடியாது. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 291 நாட்கள் இருக்கின்றன.

1 1ஃ2 வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கிற்கு அதிகாரம் பிரிக்கப்பட வேண்டுமென கொண்டுவந்த மாகாண சபைத் தேர்தல் தற்போதுவரை நடத்தப்படவில்லை. ஆகவே, அதனையே நாங்கள் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். ஏன் மாகாண சபை தேர்தலை நடத்தக் கோரி எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லையென்று, வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளிடம் கேள்விகள் எழுப்ப வேண்டும்.

கேள்வி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருவரே எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி பதவியேற்பார் என்று பசில் ராஜபக்சா கூறியுள்ளார். இது மகிந்த ராஜபக்சாவின் கருத்திற்கு முரணாகவுள்ளதே?

பதில்: இதில் எவ்வித முரணான கருத்தும் கிடையாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், தங்களுடைய கட்சியின் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர் என்று கூற முடியும். அது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடு. இது தவறில்லை. இதுவே, ஜனநாயகம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து மாபெரும் கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளோம். அதன் பின்னர் நாங்கள் பொதுவான நிலைப்பாடொன்றிற்கு வரமுடியும்.

அத்தோடு அனைத்துக் கட்சிகளுக்கும் சுயாதீன நிலைப்பாடு இருக்கின்றது. ஆகவே, இரு கட்சிகளும் இணையும் போது ஒரே நிலைப்பாட்டிற்கு வரமுடியும்.

கேள்வி: எப்போதும் மகிந்த ராஜபக்சா தீர்மானிக்கும் ஒருவரே, ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறுகின்றீர்கள். ஏன் தனிப்பட்ட ஒருவரின் தீர்மானத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள்?

பதில்: மகிந்த ராஜபக்சாவை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன. கொள்கைகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் வேறுபாடு கிடையாது.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலர் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றினர். அதனால் நாங்கள் வேறு கட்சியொன்றை உருவாக்கினோம். அதுவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.

நாட்டு மக்கள் அனைவரும் அந்த கட்சியை மகிந்த ராஜபக்ஷவின் கட்சியாகவே பார்க்கின்றனர். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மகிந்த ராஜபக்சா உருவாக்கிய அரச சொத்துகளை விற்பனை செய்யும் போது, மகிந்த ராஜபக்சா தவறானவரல்லவென்று பெரும் ஆதரவு பெருகியது. இதனாலேயே பலர் இவ்வாறு கூறுகின்றனர்.

நாட்டுத் தலைவரின் கட்சி, பிரதமரின் கட்சி, எதிர்க்கட்சித் தலைவரின் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்ஷவின் கட்சியும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட போது, ஜனாதிபதியின் கட்சியும் பிரதமரின் கட்சியும் வாக்குகளில் பெரும் வீழச்சியை கண்டன. ஆனால் நீங்கள் அதிகாரம் இல்லையென்று கூறும் மகிந்த ராஜபக்ஷவின் கட்சிக்கு பெரும் வெற்றி கிட்டியது.

ஆகவே, மக்களின் ஆதரவு கிடைத்தமையாலேயே இவ்வாறானதொரு வெற்றியை பொதுஜன பெரமன பெற்றது. அந்த ஆதரவே, நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலாகும். யுத்தத்தை நிறைவு செய்த தலைவர், நாட்டின் சிறந்த தலைவராகச் செயற்பட்டு மக்களின் துக்கத்திற்கு விடைகொடுத்து வடக்கு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் மகிந்த ராஜபக்ஷ. . அதனாலேயே மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கின்றனர். அத்தோடு அவருடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதை மக்கள் உணர்ந்து கொண்டமையினாலேயே மக்கள் பெரும் ஆதரவளிக்கின்றனர். ஆகவே, அவருடைய குடும்பத்திற்கு இல்லாது, மகிந்த ராஜபக்ஷவிற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

கேள்வி: உங்களுக்கு ராஜபக்சா குடும்பத்தைத் தவிர வேறு யாரும் வேட்பாளர்
இல்லையா?

பதில்: நீங்கள் இவ்வாறு கேட்கக் காரணம் என்ன?

கேள்வி: கட்சியில் பல முக்கியஸ்தர்கள் இருக்கின்றனர். ஏன் நீங்கள் இருக்கின்றீர்கள். ஆனாலும் ஏன் ராஜபக்சா குடும்பத்தில் ஒருவரே வேட்பாளராக வர வேண்டுமெனக் கூறுகின்றீர்கள்?

பதில்: இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தைத் தவிர வேறு யாரும் இல்லையா என்று, இந்தியாவில் யாரும் கேட்பதில்லை. காந்தி பரம்பரையே காங்கிரஸில் இருக்கின்றனர். ஆனால் இவ்வாறு யாரும் கேட்பதில்லை. இதற்குக் காரணம் மக்களுடைய ஆதரவாக இருக்கலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியிலும் குடும்ப பரம்பரையே கட்சித் தலைமைத்துவத்தில் இருக்கின்றது. ஆகவே, ஆசிய நாடுகளில் குடும்ப ஆட்சியே பெருமளவில் இருக்கின்றது. ஆனால் அதனைத் தாண்டி வேறெவரும் இல்லையா என்ற உங்களுடைய கருத்திற்கு நான் இணங்குகின்றேன். ஆனாலும் குடும்ப ஆட்சி ஆசிய நாடுகளின் இலச்சினையாக இருக்கின்றது. குடும்பத்திலுள்ளவர்களுக்கு பெரும் மக்கள் ஆதரவு இருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷ நாட்டின் சிறந்த தலைவராக உருவெடுத்தார். தோல்விக்கு பின்னர் பலர் காணாமல் போய்விடுகின்றனர். மகிந்த ராஜபக்ஷ தோற்ற பின்னரும் கூட மக்களுடைய ஆதரவு அதிகரித்தது. ஆகவே,தான் மகிந்த ராஜபக்ஷவை சிறந்த தலைவர் . என்று அனைவரும் அடையாளப்படுத்தி வருகின்றார்கள். அதனாலேயே இவ்வாறான ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது.

கேள்வி: ராஜபக்சா குடும்பத்தில் சமல், கோதா மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய மூவர் இருக்கின்றபோது, ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் முரண்பாடு ஏற்படுமாயின் பொது வேட்பாளருக்கு வாய்ப்பிருக்கின்றதா?

பதில்: ராஜபக்சா குடும்பம் இலகுவில் பிளவுபடக்கூடியதல்ல. பண்டாரநாயக்க குடும்பம் நான்கு, ஐந்தாக உடைந்தமையே அவர்களுடைய அதிகாரம் சீர்குலைந்ததற்குக் காரணமாகும். ஆனால், மகிந்த ராஜபக்ஷ குடும்பம் பெரும் சக்தி வாய்ந்தது. அதனால் அவர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை.

கேள்வி: அவ்வாறாயின் பொது வேட்பாளருக்கு வாய்ப்பில்லை?

பதில்: அது பற்றி எனக்குக் கூற முடியாது. பொது வேட்பாளரும் வரமுடியும். அதற்கும் வாய்ப்பிருக்கின்றது. இல்லையென்றும் கூறமுடியாது. இருக்குமென்றும் கூற முடியாது.

கேள்வி: தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து உருவாக்கும் கூட்டணியில் கலந்துரையாடி முக்கிய தீர்மானத்தை எடுப்போம்.

கேள்வி: மகிந்த மைத்திரி கூட்டணிக்கு தற்போது பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றதே?

பதில்: அவ்வாறு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இருவருக்கும் இணைய முடியாதென்ற நிலைபாட்டிலேயே ஐ.தே.க. இருக்கின்றது.

கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கூட்டிணைவதால் உங்களுடைய அரசியலுக்கு பாதிப்பில்லையா?

பதில்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்கின்றது. யுத்தத்திற்கு எதிர்ப்பு என்று கூறிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவை தங்களுடைய ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொண்டனர். அப்போது பாதிப்பு இருந்ததா? இல்லையே.

இதனைவிடவா மைத்திரி மகிந்த கூட்டணியில் பாதிப்பு இருக்கப் போகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சரத் பொன்சேகாவை ஏற்றுக்கொள்ள முடியுமாயின், ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள முடியுமாயின் அரசியலில் இதனைவிட பாதிப்புகள் நிறைந்த செயல் எதுவும் இருக்க முடியாது.

கேள்வி: ரணில் மைத்திரி மோதல் தீவிரமடைந்துள்ளது. இது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதா?

பதில்: நிச்சயமாக இது சாதகமாக அமையலாம். இந்த முரண்பாடு காணரமாக நாட்டின் நாடு சீர்குலைந்துள்ளது. நாட்டின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் போது நாடு பாரிய சிக்கலை சந்திக்க வேண்டிவரும்.

கேள்வி: மகிந்த ராஜபக்சாவிடமிருந்து சென்று ரணிலுடன் இணைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருடன் முரண்பட்டுக் கொண்டு மீண்டும் மகிந்த ராஜபக்சாவிடம் வந்தால் மீண்டும், அவரை ஏமாற்றமாட்டாரென்ற நம்பிக்கையுள்ளதா?

பதில்: நாங்கள் அந்தளவிற்கு சிந்திக்கவில்லை. இலங்கையின் அரசியல் அந்தளவிற்கு சீர்குலைந்துள்ளது. நான் எப்போதும் என்னுடைய நிலைப்பாட்டிலேயே இருப்பேன். என்னுடைய கட்சியாக இருக்கட்டும், கொள்கையாக இருக்கட்டும், எப்போதும் காட்டிக்கொடுக்க மாட்டேன்.

ஆனால், இலங்கை அரசியலில் எப்போதும், கட்சிகள் அதிகாரத்திற்கு வரும் போது அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் தாவுவது வழக்கமாகும். சாதாரணமாக காணப்பட்ட இந்த நிலைமை தற்போது அதிகரித்துள்ளது. அமைச்சரவையில் எந்தக் கட்சி வந்தாலும் சிலர் அமைச்சராக இருப்பர். அதிகாரம் இருக்கும் போது அந்தப் பக்கமும் இல்லாத போது இந்த பக்கமும் தாவுவர். ஆகவே, இது சாதாரணமானது.
கேள்வி: எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவீர்கள்?

பதில்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துவிட்டோம். இனி இதே கட்சிதான்.

கேள்வி: தமிழ் மக்களுடைய வாக்குகளே கடந்த தேர்தலில் உங்களுடய தோல்வி உறுதியானமைக்குக் காரணமாகும். ஆகவே, அதனைப் பெற்றுக்கொள்ள இம்முறை ஏதேனும் செயற்பாடுகள் உள்ளனவா?

பதில்: அது எங்களுடைய பக்கமிருந்த பெரும் குறைபாடு. யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்த எங்களால் தமிழ் மக்களுடைய மனதை வெல்ல முடியாது போனது. ஆகவே, இம் முறை அந்தத் தவறை புரிந்துகொண்டு அதனை நிவர்த்திக்க வேண்டும்.

கேள்வி: தேசிய அரசாங்கத்திற்கான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை தோல்வியடையச் செய்வதற்கு ஏதேனும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளீர்களா?

பதில்: நிச்சயமாக தோல்வியடையச் செய்வோம். இது பாரிய காட்டிக்கொடுப்பு. ஆகவே, இதனை தோல்வியடையச் செய்ய வேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதை நாங்கள் கோரிக்கையாக முன்வைக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு என்று கூறினாலும், வாக்கெடுப்பின் போது பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க வேண்டாமென அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.