ஜனாதிபதி தேர்தலுக்கு மைத்திரி தயாரா என்று சவால் விடுக்கின்றது, ஐதேக.

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த தயாரா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தமது கட்சியில் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களில் யார் பொதுவேட்பாளர் என்ற விடயம் இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த தயாரா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தமது கட்சியில் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களில் யார் பொதுவேட்பாளர் என்ற விடயம் இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மல்வத்து மகாநாயக்கத் தேரரை நேற்று முன்தினம் சந்தித்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல முடியும். ஆனால், பொதுத் தேர்தலுக்குச் செல்ல முடியாது. இதனை உயர்நீதிமன்றமும் உறுதியாகக் கூறிவிட்டது. அதேநேரம், ஜனாதிபதிக்குத் தேவையெனில் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லலாம். ஐக்கிய தேசியக் கட்சி இதனை முழுமையாக வரவேற்கும்.

எமது கட்சியில் நிறைய வேட்பாளர்கள் இதற்குத் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களில் யார் பொதுவேட்பாளர் என்பதை உரியநேரத்தில் முடிவு செய்து அறிவிப்போம். எமது கட்சியானது ஜனநாயகத்தை முழு மையாகக் கடைப்பிடிக்கும் ஒரு கட்சியாகும். அந்தவகையில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எமது கட்சியின் மத்தியக் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இணைந்தே தீர்மானிக்கும்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் நாம் இவ்வாறான நடைமுறையையே பின்பற்றியிருந்தோம். எனவே இந்த விடயத்தில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை” என்றார்.