ஜனனி குமார் அவர்களின் மாணவி துஷ்யா பகீரதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்

ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் மிகவும் சிறப்பான, அழகிய கலை பரத நாட்டியம் ஆகும். இந்த நடனத்தை ஆடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாக என்றாலும் ஆண்களும் இதனை ஆடுவது உண்டு. சைவ சமயத்தவர்களின் முழு முதற் கடவுளான சிவபெருமான் கூட நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுகிறது. சிவபெருமான் ஆடும் நடனம் தாண்டவம் ஆகும். மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆடுவது “ஆனந்ததாண்டவம்’ ஆகும். அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் “ருத்ரதாண்டவம்”. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடுவது “லாஸ்யா” என்று அழைக்கப்படுகிறது. உடல் அசைவுகளும் கை முத்திரையும் சேர்ந்து “அடைவு” ஆகும்.பரதநாட்டியத்திற்குப் பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக் கருவிகள் தேவை. பரதம் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்று மூன்று அடல் முறைகளைக் கொண்டது. .இன்று இக்கலை உலகின் பல நாடுகளிலும், குறிப்பாக ஈழத் தமிழர்களால் சிறப்பாகப் பயிற்றுவிக்கப் படுகிறது. பயிற்சி முடிந்ததும் பல மாணவிகள் அரங்கேற்றம் காண்கின்றனர். கனடாவிலும் பல சிறந்த நடன ஆசிரியைகள் நடனக் கல்லூரிகளை ஆரம்பித்து இக் கலையை அர்பணிப்புடன் ஆர்வத்துடன் கற்பிக்கின்றனர். அந்த வகையில் சேத்திர நடனக் கலைக் கூடத்தின் நிறுவனர் ஜனனி குமார் அவர்களின் மாணவி துஷ்யா பகீரதனின் அரங்கேற்றம் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் மாதம் 21ம் திகதி டொரோண்டோ சீனக் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
மண்டபம் நிரம்பிய கலா ரசிகர்கள். மேடையில் ஆடல் அரசன் நடராஜனின் சிலை.. மிக எளிமையான அழகான மேடை அமைப்பு. தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசியகீதம், அக வணக்கம், மங்கள விளக்கேற்றல் ஆகிய நிகழ்வுகளின் பின்னர் அரங்கேற்ற நிகழ்வு இடம் பெற்றது. நட்டுவாங்கம் செய்தவர்கள் ஜனனி குமாரும் அவரது புதல்வி தமிரா குமாரும் ஆகும். நடன அமைப்பையும் இவர்களே பொறுப்பேற்றனர். நடன அரங்கேற்றத்திற்குப் பக்க வாத்தியக் கலைஞர்கள் மிக அவசியம். வாய்ப்பாட்டினை வழங்கியவர் கானக் குரலோன் அருண் கோபிநாத். அவருக்குத் துணையாக யாழினி அபினாஸ். வயலின் வாசித்தவர் பாலமுரளி. மிருதங்கம் ரதிரூபன் பரம்சோதி. புல்லானங்குழல் வாசித்தவர் தயாபரன் செல்வநாயகம். வீணையை மீட்டியவர் பிரபா தயாளன். இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் ஆகும். நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கினார் ராகவன் பரம்சோதி. துஷ்யாவின் அன்னை அஜிதா பகீரதன்
முதல் நிகழ்வாகப் புஷ்பாஞ்சலி இடம் பெற்றது. நடன ஆக்கம் தமிரா குமார். கூப்பிய கரங்களுடன் மலர்களுடன் துஷ்யா. இறைவன், குரு, பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்தி அவர்களின் அவர்களது ஆசியைப் பெறுவதாக இந்த நடனம் அமைந்தது. அதனை அடுத்து ஷிரடி சாய் பாபாவின் புகழ் பாடும் பஜனைப் பாடல்களுக்கு ஆடிய நடனம் இடம் பெற்றது.
இதனை அடுத்து சப்தம் .இன்றைய சப்தத்திற்குத் தெரிவு செய்யப் பட்ட பாத்திரம் இராமன் ஆகும். அபிநயமும் நிருத்தமும் சேர்ந்த ஒரு உருப்படி சப்தம் ஆகும். இராமபிரானின் சிறப்புகளையும் பெருமைகளையும் இந்த நடனம் வெளிப் படுத்தியது. தாடகை வதம்,கல்லாகிய அகலிகை இராமர் பாதம் பட்டு உயிர் பெற்றமை இங்கு நடன வடிவில் எடுத்து வரப் பட்டது. அழகான சப்தம் அழகாகவும் நேர்த்தியாகவும் துஷ்யாவால் ஆடப்பட்டது.
அடுத்து பதம் இடம் பெற்றது. “நேற்றந்தி நேரத்திலே” என்ற பாடலுக்குச் சிறப்பாக அபிநயித்தார் துஷ்யா. இது முருகனைப் பற்றியது.நின்று ஆற்றங் கரையினிலே சொக்கி நின்று பேசியதை நான் கண்டேன் அய்யா நீ அவளுடன் ஜாடை காட்டி பேசியதையும் பக்கத்தில் நின்று சொக்கியதையும் கண்டேன் என்று தனது கோபத்தையும் தாபத்தையும் கொட்டித்தீர்க்கிறாள் இப்பேதை. அருமையான முக பாவங்கள் மூலமும் உடல் அசைவு மூலமும் கோபத்தையும் தாபத்தையும் சிறப்பாக வெளிப் படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார் துஷ்யா.
பரத நாட்டியத்தில் மிகவும் கஷ்டமான உருப்படி வர்ணம். இது ஆடுபவரின் திறமையையும் உடல் வலிமையையும் பொறுமையையும் கொண்டு வரும் உருப்படி. மிக நீண்ட நேரம் ஆடும் உருப்படி இது. “ கீதை உரைத்த மாதவா, தீதை அழித்த யாதவா ஓடி வா , ராதை மணாளா பேதை எனை ஆள வா’ என்ற அழகான வரிகளுடன் ஆரம்பிக்கும் இவ் வர்ணம் மதுரை முரளிதரனின் இசையில் வந்தது. அர்ஜுனனுக்குக் கீதோபதேசம் சஞ்சாரி பாவமாக கொண்டு வரப் பட்டது. அழகான உடை அலங்காரத்துடன் மிக நேர்த்தியாகவும் முகம், உடல் அசைவுகளுடனும் எவ்வித களைப்பும் இன்றி ஏறக் குறைய நாற்பது நிமிடங்கள் அதி அற்புதமாக ஆடினார்.
அய்யப்பன் மீதான பாடலுக்கு அபிநயம் செய்தார் துஷ்யா .”சரி நிகர் சமமான தெய்வம் யார் அய்யா , விரி கடல் சூழ் உலகில் உனையன்றி ஹரிஹர சுதனே பரிவுடன் சபரி மலையில் திகழ்பவனே” என பாடும் பாடலுக்கு அழகிய நடனம். இந்த நடனத்தின் சிறப்பு இதற்கான நடன அமைப்பை துஷ்யாவே செய்து இருந்தார்.
அடுத்த படைப்பு ஒரு வித்தியாசமானது. சற்று வித்தியாசமாகச் சிரிப்பு கொண்டு வரப் பட்டது. இதுவரை மேடைகளில் ஆடப் படாத நடனம் இது. இதுவும் மதுரை முரளிதரனின் ஓர் படைப்பு. துன்பத்தைப் போக்கும் சிரிப்பு, தாய்மையின் சிரிப்பு, மழலையின் சிரிப்பு, வஞ்சகச் சிரிப்பு, மாமுனிவரின் சிரிப்பு என்ற பலவித சிரிப்புகளைத் தனது நடனம் மூலம் அளித்தார். பழைய திரப் படம் ஒன்றில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் “சிரிப்பு சிரிப்பு அதன் சிறப்பைச் சீர் தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு” என்று பல சிரிப்புகளைப் பாடலாகப் பாடிச் சிரிப்பார். ஆனால் இங்கு துஷ்யா தந்து முக பாவத்தினால் பல சிரிப்புகளைக் கொண்டு வந்தது பாராட்டப் பட வேண்டும். ஜனனி குமார் அவர்களையும் அவரது புதல்வி தமிரா அவர்களையும் ஒரு புதுமையாக இந்த நடனத்தைத் தயாரித்தமைக்குப் பெரிதும் பாராட்ட வேண்டும்
சிரிப்பு நடனத்தை அடுத்துக் காவடிச் சிந்து நடந்தது. இது ஒரு வித்தியாசமான காவடிச் சிந்து இதில் சிவா பெருமானுடைய பல பண்புகள் வெளிக் கொண்டு வரப் பட்டன. இது ஒரு வித்தியாசமான அரிய காவடிச் சிந்து ஆகும் .பாடலின் இறுதியில் சிவபெருமான் ஜோதியாக வர்ணிக்கப் படுகிறார். தில்லானாவும் மங்களமும் அடுத்து இடம் பெற்றன. சொற்கட்டுகளையே மையமாகக் கொண்டு இயற்றப்படும் உருப்படி தில்லானா. மிகுந்த தாளக் கட்டுகளுடன் செய்யப் பட வேண்டிய உருப்படி இது.விறு விறுப்பாகவும் கேட்பதற்கும் பார்பதற்கும் அழகாக இருக்கும் உருப்படி இது. அம்மன் மேல் அமையப் பட்டது இது .தில்லானா நர்த்தகியின் திறமைக்கு ஓர் அளவு கோலாகும்.
அன்றைய நிகழ்வில் பல விருந்தினர்கள் பங்கு பற்றி உரை நிகழ்த்தினர். பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் தனது உரையில் இக் கலை மூலம் தமிழ் வளரும் என்றும் தமிழ் மொழி இப்படியான கலைகள் மூலம் புலம் பெயர் நாடுகளில் அழியாது என்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உதயன் பிரதம ஆசிரியர் ஆர் . என் . லோகேந்திரலிங்கம் தனது உரையில் நாம் விரும்பும் கலைகளில் நடனம் முக்கியமானது என்றும் முத்திரைகள், அபிநயம், உடல் அசைவுகள், முக பாவங்கள் என காட்டும் நுண்கலைகளில் பரதமே முதல் இடம் வகிக்கிறது என்றும் உரைத்து துஷ்யாவை வாழ்த்தினார்.
அருமையாகக் கற்பித்த ஜனனி குமாரைப் பாராட்டியதுடன் அவரது புதல்வி தமரா குமாரையும் பாராட்டினார். மிகச் சிறந்த பக்க வாத்தியக் கலைஞர்கள் மெருகேற்றினர் என்றும் ஒரு பரதக் கலை சாம்ராஜ்யத்தையே ஜனனி குமார் உருவாக்குவார் என்றார். பல பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர் என்றும் குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து கலைமாமணி ஜாகிர் ஹுசேன் கலந்து கொண்டு இருப்பது நமக்குப் பெருமையாகும் என்றும் பல சொத்துக்களைச் சேர்த்தாலும் பரதம் என்ற அற்புதமான அழிக்க முடியாத சொத்தினை துஷ்யா சேர்த்துள்ளார் என்றும் மேலும் கற்று சிறப்படைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

விசேட விருந்தினராகக் கலந்து கொண்ட ஜாகீர் உசேன் தனது உரையில் இருபத்தைந்து வருடங்களாக ஜனனி அவர்கள் நடனக் கலையைக் கற்பிப்பது இலேசான விடயம் அல்ல என்றும் பல கஷ்டங்கள் உள்ளன என்றும் மிகச் சாதாரணமாக கற்றுக் கொடுக்கும் திறமையை ஜனனி குமாரும் அவர் புதல்வி தமிராவும் கொண்டுள்ளனர் என்றார். குறிப்பாக வர்ணத்தை துஷ்யா மிகச் சிறப்பாகச் செய்தார் என்றும் இது நடனமா இல்லை உண்மை வாழ்கையா என்று நினைக்கத் தொன்றியது என்று பாராட்டினார்.
கலைஞர்கள் அணிவ்ரும் கௌரவிக்கப் பட்டனர் . அரங்கேற்றம் கண்ட துஷ்யாவிற்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. துஷ்யா நன்றி உரை வழங்கினார். .
டொராண்டோவில் நடந்த மிகச் சிறந்த அரங்கேற்றம் இது என்று சொல்ல முடியும். அருமையான பயிற்சி, நட்டுவாங்கம், செய்த ஜனனி குமார் அவர்களையும் அவரது புதல்வி தமிரா குமார் அவர்களையும் பாராட்ட வேண்டும் “ தாரமும் குருவும் தலிவிதிப் பயன்’ என்பார்கள். இங்கு துஷ்யா அவர்களுக்கு ஒரு சிறந்த குரு அமைந்துள்ளார். மிகச் சிறந்த ஒப்பனையும் உடை அலங்காரமும் நடனத்தை மெருகேற்றியது . துஷ்யா மேலும் கற்று சிறந்த நடனத் தாரகையாக மிளிர வாழ்த்துக்கள். .