சோபியாவின் பின்னணி என்ன: புலனாய்வு அமைப்புகள் விசாரணை

விமானத்தில் பா.ஜ.,விற்கு எதிரான கோஷம் எழுப்பிய சோபியா என்ற மாணவியின் போராட்ட பின்னணி குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

பா.ஜ., தலைவர் தமிழிசை, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது அவரை விமர்சித்த, தூத்துக்குடியை சேர்ந்த பெண் சோபியா கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கனடாவில் படித்து வரும் சோபியா தனது பெற்றோர்களுடன் விமானத்தில் பயணித்த போதே இச்சம்பவம் நிகழ்ந்தது.

தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சாமியின் மகள் சோபியா 28. கனடா நாட்டில் ஆராய்ச்சி மாணவியாக பயின்றுவந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அவரை தந்தையும், தாய் மனோகரியும் சென்னை சென்று விமானத்தில் அழைத்துவந்தனர். பெற்றோர்கள் முன்னிலையில்தான் இத்தகைய கோஷமிட்டுள்ளார்.

நேற்று காலை விமானநிலையத்தில் காத்திருந்தபோது, தூத்துக்குடி செல்லும் இன்டிகோ விமானத்தில், பா.ஜ., தலைவர் தமிழிசையும் வருவதை, முன்கூட்டியே அறிந்துள்ளார். எனவே விமானம் கிளம்புவதற்கு முன்பாகவே சோபியா, ‛‛இன்று விமானத்தில் தமிழிசைக்கு எதிராக கோஷமிடப்போகிறேன்… என்னை என்ன விமானத்தில் இருந்து தள்ளியாவிடுவார்கள் பார்ப்போம்..” என தமது டுவிட்டர் பக்கத்தில் தகவல் பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் விமானத்தில் ஏறும் போது திட்டமிட்டபடி கோஷம் எழுப்பினார்.

தமிழிசையும் விமானத்தில் இதனை சர்ச்சையாக்கவில்லை. விமானம் தூத்துக்குடியில் இறங்கிய பிறகு தமிழிசை இதனை பிரச்னையாக்கினார். சோபியாவிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, தாம் கோஷமிட்டதில் தவறு இல்லை என தெரிவித்துள்ளார். எனவே தமிழிசை போலீசில் புகார் செய்யப்போவதாக தெரிவித்தார். எனவே வழக்கு பதிவு செய்யப்படலாம்.. ‛‛சோபியா.. ஒரு ஸாரி சொல்லிவிடுங்கள்” என போலீசார் கேட்டுக்கொண்டும் சோபியா அதற்கு மறுத்தார்.

சோபியா, இதனை திடீரென மேற்கொள்ளவில்லை. திட்டமிட்ட இச்செயலின் பின்புலம் குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகளும் விசாரித்து வருகின்றன. அவர் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் அவ்வப்போது போராட்டங்களுக்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் இணையதளங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஜாமின் கோரி கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணை நடந்தபோது, ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினரை அங்கு காணமுடிந்தது. அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கு முடிவுக்கு வரும் வரையிலும் அவர் மீண்டும் கனடாவிற்கோ வெளிநாடுகளுக்கோ செல்லமுடியாதபடி பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், சோபியாவின் தந்தை தமிழிசை மற்றும் கட்சியினர் மீது புதுக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்னமும் வழக்குபதிவு செய்யப்படவில்லை என அவரது வக்கீல் தெரிவித்தார்.