சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

சென்னை, டிச. 6
தமிழக மக்களை மட்டுமல்ல, உலகத் தமிழினத்தை கண்ணீரில் தவிக்கவிட்டு, அமரரான வரலாற்று சகாப்தம், இரும்புப்
பெண்மணி, அன்னை தெரசாவின் அன்பை பெற்றவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அன்னை இந்திரா உள்ளிட்ட தலைவர்களின் நன்மதிப்பை பெற்று,
புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்து தமிழக மக்களின் தாயாக விளங்கி ‘அம்மா’ என எல்லோராலும் அன்போடு அழைக்கவிட்டு, கண்ணீரில் கதறவிட்ட முதலமைச்சர் அம்மா
அவர்களின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை நல்லடக்கம்.

இறுதிச்சடங்கில், கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அமைச்சர்கள், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு முப்படை வீரர்கள் ஜெயலலிதா உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சந்தன பேழைக்கு மாற்றப்பட்டது. இறுதியாக அவரது உடலுக்கு கவர்னர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தலைமைச்செயலாளர் ராமமோகன்ராவ், முன்னாள் கவர்னர் ரோசய்யா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், திருநாவுக்கரசர், நடராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டு சசிகலாவிடம் கொடுக்கப்பட்டது. வைணவ சம்பிரதாயப்படி, ஸ்ரீரங்க பட்டர் வழிகாட்டியவாறு சசிகலா இறுதிச்சடங்குகள் செய்தார். தொடர்ந்து, துப்பாக்கி குண்டுகள் முழங்கி ஜெயலலிதா உடலுக்கு ராணுவ மரியாதையுடன் அளிக்கப்பட்டது. பின்னர் 6 மணியளவில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த சந்தன பேழையில், புரட்சி தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா என ஆங்கிலம், தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.