சென்னையில் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி; காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸாருக்கு நேரில் ஆறுதல்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 போலீஸாரை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

“டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 நாட்களில் சென்னையில் 100 சதவீதம் முழுமையாக தடுக்கப்படும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 போலீஸார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று (புதன்கிழமை) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல் ஆணையர். ஏ.கே.விஸ்வநாதன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

வேண்டிய மருத்துவ உதவிகள் கிடைப்பது பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு வார்டில் 7 காவலர்கள் டெங்கு அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 164 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 39 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 39 பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமுடன் உள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னையில் முழுமையாக 10 முதல் 15 நாட்களில் டெங்கு தாக்கம் கட்டுப்படுத்தப்படும். தமிழகத்தில் களப்பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணியில் களத்தில் உள்ளனர். தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசுக்களை ஒழிக்க அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நாளை மறுநாள் சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் டெங்கு காய்ச்சல் தொடர்பான மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் காவலர்கள் குடியிருப்பிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகம் முழுதும் காய்ச்சல் தொடர்பான 416 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவமனைகளில் மருந்துகள் தயார் நிலையில் இருக்கின்றன. மருந்துகள் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. சென்னையில் 100 சதவீதம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தபடும்” என்று கூறினார்.