சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் – பேஸ்புக்

சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் பணியாற்றுகிறது என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் விமர்சித்துள்ளார்.

சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் பிரபலமடைந்து வருகிறது.
இதில் சிலர் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் கலாசாரத்தை கேள்விகுறியாக்கும் வகையிலும், ஆபாசமாகவும் வீடியோ பதிவிட்டு சர்ச்சையில் சிக்குகின்றனர். அதே நேரத்தில் அரசியல், பொதுமக்கள் போராட்டங்கள், அரசுக்கு எதிரான விமர்சனங்கள் என அனைத்தையும் டிக்டாக் செயலி, சென்சார் செய்துவிடுவதால் அவ்வாறான பதிவுகளை வெளியிட முடிவதில்லை எனக் கூறப்படுகிறது.
உதாரணமாக ஹாங்காங் போராட்டம் குறித்து ஒரு சிறு வரி கூட டிக்டாக் செயலியில் இருக்காது என சில போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், பலரும் டிக்டாக் செயலியை எதிர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனரான மார்க் ஜக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மார்க் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற எங்கள் சேவைகளில் வலுவான தனியுரிமை பாதுகாப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக எல்லா இடங்களிலும் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பயன்படுத்துகின்றனர்.
உலகெங்கும் விரைவாக வளர்ந்து வரும் டிக்டாக் செயலி மீது அமெரிக்காவிலும் எதிர்ப்பு உள்ளன. இவ்வாறான செயலிக்கு அமெரிக்காவிலும் சென்சார் செய்யப்படுவதால் மக்களின் போராட்டங்கள் வெளியாவதில் சிக்கல் உள்ளது. டிக்டாக் செய்யும் வேலைகளை எல்லாம் மக்கள் புரிந்து உணர வேண்டும். சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் பணியாற்றுகிறது. இது போன்ற சேவை நமக்கு தேவையா. இவ்வாறு மார்க் பேசினார்.