சூயஸ் கால்வாயில் தரை தட்டிய ‘எவர் கிவன்’ கப்பல்: தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்

உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரும்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் (9.6 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்கின்றன கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள்.

இதன் பொருள் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்பதாகும்.

மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாய் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான சுருக்கமான கடல்வழி. இதற்கு மாற்று என்றால் ஆப்பிரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனை வழியாக சுற்றிக்கொண்டு செல்வதே ஆகும். இது மிகவும் நீளமான சுற்றுவழி.

ஒவ்வொரு நாளும் இந்த கால்வாய் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்தின் மதிப்பு 510 கோடி அமெரிக்க டாலர் என்றும், கிழக்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்தின் மதிப்பு 450 கோடி அமெரிக்க டாலர் என்றும் கப்பல் போக்குவரத்து வல்லுநர் லாயிடு தருகிற தரவுகள் தெரிவிக்கின்றன.

கப்பலை மீட்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், இந்த வேலை முடிய வாரக்கணக்கில் ஆகும் என்று தெரிகிறது.

“திடீரென வீசிய பலத்த காற்றால் பாதை மாறிப்போன இந்தக் கப்பல் துரதிர்ஷ்டவசமாகத் தரை தட்டியது என்று சந்தேகிக்கப்படுவதாக” எவர்க்ரீன் மரைன் நிறுவனம் கூறுகிறது.