
சுதந்திர தின நிகழ்வை ஏன் புறக்கணித்தேன்?
விளக்கமளிக்கிறார் மஹிந்த ராஜபக் ஷ
(ஆர்.யசி)
நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி பொருளாதாரத்தை வீழ்த்திவிட்டு சுதந்திர தினம் கொண்டாடிய அரசாங்கத்தின் அழை ப்பை ஏற்கமுடியாத காரணத்தினாலேயே அதனை நிராகரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
நாம் போராடி அழித்த ஆயுத காலாசாரம் மீண்டும் நாட்டில் உயிர்ப்பெற்றுள்ளது. வடக்கில் மீண்டும் ஆயுத வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி நேற்று குருநாகல் பகுதியில் மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டிருந்த நிலையில் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து எமது முன்னைய தலைவர்கள் நாட்டை மீட்டு எமக்கு சுதந்தரத்தை பெற்றுக்கொடுத்த பின்னர் இந்த நாட்டுக்கென சுய கொள்கையில் முன்னைய தலைவர்களான சிறிமாவோ பண்டரநாயக, பிரேமதாச போன்றவர்கள் நாட்டை கட்டியெழுப்பினர். அதன் பின்னர் இந்த நாட்டில் முப்பது ஆண்டுகள் பயங்கரவாத சூழல் நிலவியது. எனினும் புலிகளுக்கு போஷனை கொடுத்தவர்களை நிராகரித்து நாம் இந்த நாட்டில் வெடிகுண்டு சத்தங்களை நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
இன்றைய அரசாங்கம் இந்த நிலைமைகளை எல்லாம் மறந்து சுதந்திரம் என்றால் என்னவென்பதை மறந்து செயற்படுகின்றது. நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டிய போதும் இந்த அரசாங்கம் மீண்டும் நாட்டில் ஆயுத கலாசாரத்தை உருவாக்கியுள்ளது. இன்று வடக்கிலும் தெற்கிலும் மீண்டும் ஆயுத சத்தங்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. நிறுத்தப்பட்ட போர் சூழல் மீண்டும் நாட்டில் ஏற்படும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று வெளிப்படையாக மக்களை கொல்லும் நிலைமை உருவாகியுள்ளது. வடக்கில் ஆயுத குழுக்கள் மீண்டும் எழுர்ச்சி பெற்றுள்ளன. வடக்கில் இன்று பாதுகாப்பான சூழல் ஒன்று இல்லாமையே இதற்குக் காரணமாகும் . தேசிய பாதுகாப்பு என்பது இன்று கேலிக்கூத்தாக மாறியுள்ளது. அதேபோல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாட்டின் நிலங்களையும் சொத்துக்களையும் விற்கும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. எம்மை திருடர்கள் என கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் நாட்டின் சொத்துக்களை அழித்தும், சூறையாடியும் ஆட்சி நடத்துகின்றனது. இவ்வாறான நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடி நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
சுதந்திரதின விழாவிற்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் நாம் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள விரும்பவில்லை. மோசடிக்கார ஆட்சியின் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள நான் விரும்பவில்லை. அதே நிலையில் அன்றைய தினம் எனக்கான மக்கள் சந்திப்பு கூட்ட ங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆகவே அவற்றை நான் புறக்கணிக்க விரும்பவில்லை.
நான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தான் உள்ளேன். எனக்கென ஒரு தனிக் கட்சி இன்னும் உருவாக்கப்படவில்லை. என்னை ஆதரிக்கும் பொது எதிரணியினருக்கு நான் ஒத்துழைப்பு வழங்கி அவர்களின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு ஆதரவாக என்னை இணைத்துக்கொண்டுள்ளேன். அதற்காக நான் தனிக் கட்சி உருவாக்கியுள்ளேன் என கூற முடியாது. இப்போதும் நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவனாகவே உள்ளேன். என்னை கட்சியில் இருந்து வெளியேற்றவும் தனிமைப்படுத்தவும் சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் நான் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க இன்னும் காலம் உள்ளது. மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் என்னை விட்டு நீங்கவில்லை என்றார்.