Go to ...
Canada Uthayan Tamil Weekly
* தேர்தல் வெற்றிக்காக காங்., எந்த எல்லைக்கும் செல்லும்: தேவகவுடா    * சீக்கிய இளைஞர்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளிக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்    * 'தவறு நடந்தது உண்மை தான்': மவுனம் கலைத்தார் பேஸ்புக் நிறுவனர்    * இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்    * கனிஷ்க் கோல்ட் பிரைவேட் லமிட்டெட் என்ற சென்னை நகைக் கடை அதிபர் சுமார் 824 கோடி ரூபாய் கடன்: சி.பி.ஐ. சோதனை
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, March 23, 2018

சீன எதிர்ப்பிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்: ஆக்கப்பூர்வ உறவுகளை வலியுறுத்தி சீன அதிபருக்குக் கடிதம்


சீனாவை கடுமையாக எதிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென சீன அதிபர் ஜின்பிங்கிற்கு ‘ஆக்கப்பூர்வமான உறவுகள்’ வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது, பல தரப்புகளிலிருந்தும் ஐயங்களைக் கிளப்பியுள்ளது.

ஜின்பிங்குக்கு ட்ரம்ப் எழுதிய இந்த இணக்கமான கடிதத்தில் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதற்கு சீன அதிபர் தெரிவித்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்ததோடு சீன மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

“அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்குக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு நலன்கள் பயக்கும் வகையில் ஆக்கப்பூர்வ இருதரப்பு உறவுகள் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்” என்று இது தொடர்பாக வெளியான வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தக் கடிதம் குறித்து சீன அரசுவட்டாரங்கள் கூறுகையில், ட்ரம்பை, சீன அதிபர் தொலைபேசியில் அழைத்தால் அது எதிர்மறையாகக் கூட போய் முடிய வாய்ப்புள்ளது, சீன அதிபர் இழிவைக்கூட சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஆஸ்திரேலிய பிரதமருக்கும் ட்ரம்புக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட களேபரங்களை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது, அதாவது ஆஸ்திரேலிய, அமெரிக்க உறவுகளே முறிந்த தொலைபேசி உரையாடலாக அது அமைந்தது. அகதிகள் தொடர்பாக ட்ரம்பிடம் ஆஸ்திரேலிய அதிபர் டர்ன்புல் பேசினார்.

‘இதே போன்ற ஒரு நிலையை சீனா விரும்பாது. அப்படி ஏதாவது இழிவு ஏற்பட்டால் அது சீன மக்களுக்கும் அதிபருக்கும் ஏற்படும் இகப்பெரிய சங்கடமாகும் என்று அமெரிக்க உறவுகளுடன் நெருக்கமாக இருக்கும் சீன உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ட்ரம்பின் இந்த அழைப்பு குறித்து அமெரிக்காவைச் சாராத மேற்கத்திய தூதர் ஒருவரும் கூறும்போது, “சீனாவுக்கு கட்டுக்கோப்பான ஒரு சூழலில்தான் இது நடைபெற வேண்டும், ஆனால் இத்தகைய கட்டுக்கோப்பான சூழலை கணிக்கவியாலா அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்துக் கொண்டு சீனா உத்தரவாதமாக நம்ப வாய்ப்பில்லை” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

தைவான் விவகாரம், அதாவது தைவான் அதிபருடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் நடத்தியதிலிருந்தும், அமெரிக்க வேலைவாய்ப்புகளை சீனா அபகரிக்கிறது என்றும் தனது பணமான யுவானின் மதிப்பை கண்டபடி சரியவிட்டு இதன் மூலம் பன்னாட்டு வர்த்தகத்தில் பாரபட்சமான சாதகங்களை சீனா பெற்றுவருகிறது என்றும் பல்வேறு விதமாக சீனாவை வெறுப்பேற்றியிருந்தார் ட்ரம்ப். மேலும், சீன இறக்குமதிகளுக்கான கட்டணங்களை உயர்த்துவோம் என்றும் அவர் சீண்டினார்.

மேலும், ட்ரம்பின் முக்கிய அமைச்சரான ரெக்ஸ் டில்லர்சன், தெற்கு சீன கடல் பகுதியில் சீனா உருவாக்கிய தீவுகளுக்கு அருகில் சீனா செல்ல முடியாதவாறு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சீனக் கொள்கை ஏதாவது இருக்கிறதா என்பதை இதுவரை தெரியவில்லை என்று பரவலாக வாசிக்கப்படும் சீன அரசு ஊடகமான குளோபல்டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த இதழில் சீனாவை எதிரியாகப் பாவித்தால் அமெரிக்காவுக்கு அது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால்தான் ட்ரம்ப் உடனடியாக சீனா விவகாரத்தை கையில் எடுக்கவில்லை என்றும் “சீனாவுக்கு எதிராக உண்மையான கடினமான நடவடிக்கை சிக்கலான சங்கிலித் தொடர் விளைவுகளை கட்டுப்பாடு செய்யவியலாத எல்லைகளுக்குச் செல்லும் என்று ட்ரம்ப் உணர்ந்திருக்கலாம்” என்று அந்த இதழின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ரென்மின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பன்னாட்டு உறவுகள் துறை பேராசிரியர் வாங் இவேய் கூறும்போது, “உலகத்தைக் குழப்பில் ஆழ்த்தும் பல அறிவிப்புகளை ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார். இதில் தென் சீன கடல் பகுதி விவகாரம், ‘ஒரே சீனா’ கொள்கை ஆகியவையும் அடங்கும். எனவே இந்நிலையில் சீன அதிபருக்கு ட்ரம்ப் தொலைபேசி அழைப்பு விடுத்தால், நிச்சயம் ஜின்பிங் ‘நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டு விடுவார். இதனை தவிர்க்கவே முதல்படியாக கடிதம் அனுப்பியுள்ளார் ட்ரம்ப்” என்று விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2