சீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்

ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு க்வாட் நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளன. இந்த பயிற்சி அடுத்த மாதத்தில், அதாவது நவம்பரில், வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலில் மேற்கொள்ளப்படும். இதற்கு அதிகாரப்பூர்வமாக ‘மலபார் பயிற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து சீனாவிலும் எதிர்வினைகள் எழுகின்றன.

ஆஸ்திரேலியா, 2007 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. ஆனால் இப்போது அந்நாடு மீண்டும் ராணுவ பயிற்சியில் இணைவது, குவாட் நாடுகளின் அமைப்பு மேலும் வலுவடையும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் கூட்டம், அதாவது ‘நாற்கரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தை’ பல வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

கொரோனா பெருந்தொற்றின் இந்த காலகட்டத்தில் இந்த நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நடத்திய தனிப்பட்ட சந்திப்புகளே பல செய்திகளைச் சொல்வதாக ஃபுடான் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் ஜாங் ஜியாடோங் தெரிவித்துள்ளார்.

“இந்தச் சந்திப்புகள் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக இந்தத் தலைவர்கள் நேரில் சந்திப்பதையே விரும்பினர்,” என்று இவர் கூறுகிறார்.

ஜப்பான் பிரதமர் யோஷிஹிடா சுகா, ‘இந்திய-பசிபிக்’ பிராந்தியத்தை சுதந்திரமாகவும், அச்சமில்லாமலும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், “இந்த விவாதத்தின் உண்மையான காரணம், ஒரே ஒரு நாடுதான் – அது சீனாதான்,” என்கிறார் பேராசிரியர் ஜியோடாங்.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை, அதனால்தான் ஆஸ்திரேலியா 2007ல் இந்த ராணுவப் பயிற்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது.

ஆனால் அக்டோபர் 6 கூட்டத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், ‘இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஜனநாயக நாடுகள் தங்களுக்கிடையிலான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை குவாட்டின் நான்கு நாடுகளும் ஒப்புக் கொள்வதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மேரிஸ் பாயனும் ஒரு அறிக்கையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய பிரதமருக்கும் ஆஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே, நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்த ராணுவ பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது. இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் ஒரு ‘மெய்நிகர் சந்திப்பு’ நடத்தினர். கூட்டத்தில் பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மலபார் பயிற்சி, அந்த உரையாடலின் விளைவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.