சீதாராம் யெச்சூரி மகன், காங்., மூத்த தலைவர் வாலியா கொரோனாவுக்கு பலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மூத்த மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் வாலியாவும் கொரோனாவால் உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரி (34) கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛எனது மூத்த மகனாக ஆசிஷ் யெச்சூரி கோவிட் தொற்று காரணமாக சற்று முன்னர் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், சானிட்டரி ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’ எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஏ.கே.வாலியா கொரோனா தொற்று காரணமாக டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

யெச்சூரி மகன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது டுவிட்டர் பதிவில்; சீதாராம் யெச்சூரி மகன் கொரோனாவுக்கு பலியான செய்தி அறிந்து கவலையுற்றேன். அவரை பிரிந்து வாடும் யெச்சூரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி !இவ்வாறு கூறியுள்ளார்.