சிவபக்தரின் ஜீவசமாதி அறிவிப்பு: சிவகங்கையில் குவிந்த பக்தர்கள்

சிவகங்கை அருகே, பாசாங்கரையில் பிறந்தவர், இருளப்பசுவாமி, 77. இவர், 12 வயதில் இருந்தே சிவபக்தர். கடந்த ஆண்டு வரை, திருவண்ணாமலை உட்பட சிவத்தலங்களுக்கு நடந்தே சென்றுள்ளார். 1700 கி.மீ., க்கு மேல் பாதயாத்திரை சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன், ‘செப்., 12 இரவு, 12:00 மணி முதல் மறுநாள் காலை, 5:00 மணிக்குள் என் உடலை விட்டு, உயிர் பிரியும். அன்றே எனக்கு ஜீவசமாதி கட்டவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இதன்படி, அவரது, 46 சென்ட் நிலத்தில் எங்கு சமாதி கட்ட வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார். சில நாட்களாக, வீட்டில் தியானத்தில் இருந்தவர், இன்று காலை (செப்.12) முதல், ஜீவசமாதி அடைய உள்ள இடத்தில், தியானம் துவக்கினார். ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்றனர்.

இருளப்பசுவாமி மகன் கண்ணாயிரம் கூறியதாவது: என் தந்தை, கடவுளோடு இணைந்து விட்டதாக, ஆறு மாதங்களுக்கு முன் சொன்னார். சிவன், அவரது கனவில் வந்து, ஜீவசமாதி அடையுமாறு கேட்டதாக கூறினார். உயிர் பிரியும் போது, சிவலிங்கத்தை தழுவியபடியே இருக்க வேண்டும் எனக் கூறினார். இதற்காக, ஆக., 18 முதல் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார். உயிர் பிரிந்ததும், 7 அடி ஆழத்தில் விபூதி, மரிக்கொழுந்து, துளசி, வில்வம் இலைகளுடன், லிங்கத்தை அணைத்தபடி அடக்கம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.