சிவசேனா அல்ல ‛சோனியா சேனா’: நடிகை கங்கனா ரணாவத்

சிவசேனா, நடிகை கங்கனா ரனாவத் இடையிலான மோதல் போக்கின் உச்சமாக, நடிகையின் அலுவலகம் நேற்று இடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கங்கனா, பால் தாக்கரே, கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம், அதிகாரத்திற்காக விற்கப்பட்டதாகவும், சிவசேனா கட்சியை ‛சோனியா சேனா’ எனவும் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாபியாக்கள் குறித்தும் சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், ‛மும்பை போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை’ எனவும், ‛மும்பை பாதுகாப்பற்ற நகரம்’ எனவும் விமர்சித்திருந்தார். இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்தன.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை நகரம் உள்ளது என்று கங்கனா விமர்சித்ததால் கடும் கண்டனம் தெரிவித்த, ஆளும் சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சித் தலைவர்கள், கங்கனாவுக்கு மிரட்டல் விடுத்தனர்.

இதற்கிடையே, கட்டட அமைப்பு, சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறி, மும்பையில் உள்ள கங்கனாவின் அலுவலகத்துடன் கூடிய பங்களாவிற்கு வெளியே, நேற்று முன்தினம், ‘நோட்டீஸ்’ ஒட்டப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்கும்படியும், கங்கனாவுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், அந்த பங்களாவை, ‘புல்டோசர்’ உதவியுடன், மாநகராட்சி அதிகாரிகள், நேற்று இடித்தனர்.

இது குறித்து கங்கனா, மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனால், அலுவலக கட்டடத்தை இடிக்கும் பணியை நிறுத்திவைக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ‛தனது அலுவலகம் இடிக்கப்பட்டது போல் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும். இன்று அனுகூலமாக உள்ள காலம் எப்போதும் அப்படியே இருக்காது,’ எனக் கூறினார். சிவசேனா மீதான கடுமையான தாக்குதலில், பால் தாக்கரே கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம், அதிகாரத்திற்காக விற்கப்பட்டதாக கங்கானா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார். மேலும், சிவசேனா கட்சியை “சோனியா சேனா” என்று முத்திரை குத்திய ரனாவத், பிரஹன்மும்பை மாநகராட்சியை (பிஎம்சி) கண்டித்து, அதை ஒரு குடிமை அமைப்பு என்று அழைப்பது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும் எனக்கூறினார்.