சிவசேனாவுக்கு புது தலைவலி : ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவிக்கு தங்கள் கட்சியின் ஆதித்யா தாக்கரேவை முதல்வராக நியமிப்பதற்காக பாஜ.,விடம் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. இந்நிலையில், அக்கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக முன்னிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் குரல் எழுப்பி வருவதால், புது சிக்கலில் சிவசேனா தலைமை தவிக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ., – சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. ஆனாலும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு முதல்வர் பதவி ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். இதனால், புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தானே மாவட்ட எம்.எல்.ஏ.,வான ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா தரப்பில் முதல்வராக்க வேண்டும் என ஒரு தரப்பினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கடந்த 2004 முதல் எம்.எல்.ஏ.,வாக இருந்து வரும் ஏக்நாத், தானே மாவட்டத்தில் தனி செல்வாக்கு படைத்தவராக திகழ்கிறார். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உடன் நெருக்கமாக இருப்பதால், அவரது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இதனால், ஏக்நாத்துக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இது சிவசேனா தலைமைக்கு நிச்சயம் புது தலைவலியாக இருக்கும். மேலும், இதில் நல்ல முடிவு எடுக்கவில்லை எனில், அவர் பாஜ.,வில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.