சிறை முறைகேடு புகார் நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு பல ஆண்டு சிறை தண்டனை: முன்னாள் டிஐஜி ரூபா பேட்டி

பெங்களூரு சிறையில் விதிமுறை களை சசிகலா மீறியதாக எழுந்திருக்கும் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் டிஐஜி ரூபா டி.மவுட்கில் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்து சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருவதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் புகார் தெரிவித்தார். சிறை அதிகாரியின் காரில் சசிகலா ரகசியமாக வெளியில் சென்று வரும் சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ ஊடகங்களில் வெளியாகியது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலை விசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில் நேற்று முன்னாள் டிஐஜி ரூபா டி.மவுட்கில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறை முறைகேடு தொடர்பாக எனது விசாரணையை 2 அறிக்கைகளாக தொகுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டேன். அதில் நான் குறிப்பிட்டுள்ள பல குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது. உயர்நிலை விசாரணைக் குழு என்னை அழைத்து கேட்டால், அதனை சமர்ப்பிப்பேன்.

சசிகலா சிறை விதிமுறைகளை மீறியது தொடர்பான எனது அறிக்கைக்கு வலுவூட்டும் விதமாக அண்மையில் வீடியோ ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதில் சசிகலா சீருடை அணியாமல், சிறப்பு சலுகைகளை பெற்று வருவது உறுதியாகியுள்ளது. எனது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு மேலும் பல ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு ரூபா கூறினார்.