சிறையில் இருந்து ஆக. 14 ல் சசிகலா விடுதலை?

‘சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, ஆகஸ்ட், 14ல் விடுதலையாவார்’ என, பா.ஜ., பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை, கர்நாடக அரசோ, சிறை நிர்வாகமோ உறுதிப்படுத்தவில்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு, 2017 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன், ஜெ., இறந்து விட்டதால், அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் நான்கு ஆண்டு தண்டனை காலம், 2021 பிப்ரவரியில் முடிகிறது. ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கணக்கிட்டாலும், 2020 டிசம்பரில் தான், விடுதலையாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், ‘ஆக., 14ல், சசிகலா விடுதலையாகிறார்’ என, பா.ஜ., பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, ‘டுவிட்டர்’ பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், ஆசீர்வாதம் ஆச்சாரியின் தகவலில் உண்மை இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக, அரசியல் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். இதை, கர்நாடக அரசோ, சிறை நிர்வாகமோ உறுதிப்படுத்தவில்லை.
சிறையில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக, சசிகலாவுக்கு எதிராக ஏற்கனவே குற்றச்சாட்டு இருப்பதால், தண்டனை குறைப்புக்கு சாத்தியமில்லை என, ஒரு தரப்பு தெரிவிக்கிறது