சிதம்பரம் மீது சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது, சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏர்செல் நிறுவனம் 2ஜி அலைவரிசை ஒதுக்க கோரியிருந்தது. ஆனால் ஏர்செல் நிறுவனத்திற்கு அலைவரிசை உரிமம் வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டது. மேலும் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.

எர்செல்லை மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்க நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. இத்துடன் பல கோடிகள் கைமாறப்பட்டன. இது தொடர்பான வழக்கில் கடந்த 2016ல் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. மாஜி நிதி அமைச்சராக பொறுப்பில் இருந்த சிதம்பரம் மகன் கார்த்தி மீதும் குற்றச்சாட்டு பதியப்பட்டது.

மேலும் கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திக்கு சொந்தமான 1.16 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறை ஜப்தி செய்தது. தொடர்ந்து சிதம்பரம் மீதான பிடியும் இறுக துவங்கியுள்ளது. கடந்த மாதத்தில் சிதம்பரம் தன்னை கைது செய்யக்கூடாது என தடையும் பெற்றுள்ளார்.

ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனம் 2006ம் ஆண்டில் வாங்கியது. 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் FIPB ஒப்புதல் அளித்தபோது, மத்திய நிதி அமைச்சராக இருந்தவர், ப.சிதம்பரம்.
இன்று சி.பி.ஐ., கூடுதல் குற்றச்சாட்டை டில்லி பாட்டியலா கோர்ட்டில் பதிவு செய்துள்ளது. இதில் சிதம்பரம் உள்ளிட்ட 18 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை வரும் 31 ம் தேதி நடக்கிறது.