சிதம்பரம் எங்கே? : சுப்ரமணிய சாமி

முன்ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி டுவீட் செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் நேற்று (ஆக.,20) தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சிதம்பரத்தை கைது செய்து, விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

இதனால் சிதம்பரத்தின் வீட்டு வாசலில், தாங்கள் கொண்டு வந்த நோட்டீசை அதிகாரிகள் ஒட்டிவைத்து விட்டு சென்றனர். அதில், இன்னும் 2 மணி நேரத்தில் சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி டுவீட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், “நேர்மையற்ற சிதம்பரம் தலைமறைவாகி உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வலைவிரித்து தேடி வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார். இதனை சுமார் ஒன்றரை லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

மற்றொரு டுவீட்டில், “ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கை விசாரித்தது யார்? அமலாக்கத்துறையின் இணை இயக்குனர் டாக்டர்.ராஜேஷ்வர் சிங். பதவி உயர்வு மறுக்கப்பட்டு, லக்னோவிற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது தான் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு. கலியுகம்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணியசாமியின் இந்த டுவீட்டை 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.