சிதம்பரத்திற்கு ஜாமின் கொடுத்தால் வெளியே வந்து சாட்சிகளை அழித்து விடுவார்

‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு 2007ல் காங். தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. காங். மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி ஐகோர்ட் கடந்த ஆக., மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிதம்பரத்தை ஆக., 21ல் சி.பி.ஐ., கைது செய்தது. அதன் பின் சி.பி.ஐ., அதிகாரிகள் ஐந்து தவணைகளில் சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பின் செப்., 5ம் தேதியில் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்; அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் டில்லி திஹார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஜாமின் வழங்கக் கோரி ஒரு மனுவும் சி.பி.ஐ., நீதிமன்றம் விதித்த நீதிமன்ற காவலை ரத்து செய்யக் கோரி ஒரு மனுவும் டில்லி ஐகோர்ட்டில் சிதம்பரம் சார்பில் செப்., 11ல் மனு தாக்கல் செய்யப்பட்டன. சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் ஜாமின் கோரி தாக்கல் செய்த இந்த மனுவில், சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன் நான் சமூகத்தில் எனக்கு மதிப்பு மரியாதை உள்ளது. அதனால் நான் தப்பிவிடுவேன் ஆவணங்களை திருத்திவிடுவேன், சாட்சிகளை கலைத்துவிடுவேன் என கூறப்படுவதை ஏற்க முடியாது.
இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் என முதலில் இருந்தே கூறி வருகிறேன். எனக்கு ஜாமின் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் உத்தரவுகளை பின்பற்ற தயாராக உள்ளேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

மேலும், சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனு: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் சொல்படியே சி.பி.ஐ. செயல்பட்டு வருகிறது. 15 நாள் காவலில் சி.பி.ஐ. என்னை முழுமையாக விசாரித்து விட்டது. அப்படியிருந்தும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் எனக்கு நீதிமன்ற காவல் விதித்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும், என்றார்.
இன்று (செப்., 30) இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், சிதம்பரத்திற்கு ஜாமின் கொடுத்தால் வெளியே வந்து சாட்சிகளை அழித்து விடுவார் என சிபிஐ தரப்பு வாதிட்டது. இதனால், சிதம்பரத்தின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.