சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற பாகிஸ்தானுடன் மோதியது. கடைசி நேரத்தில் முதுகுவலி பிரச்சினையில் சிக்கிய முகமது அமிர் பாகிஸ்தான் அணியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக புதுமுக வீரர் ருமான் ரயீஸ் இடம் பெற்றார். இன்னொரு மாற்றமாக பஹீம் அஷ்ரப் நீக்கப்பட்டு ஷதப் கான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் கழற்றி விடப்பட்டு, ஜானி பேர்ஸ்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்தின் இன்னிங்சை பேர்ஸ்டோவும், அலெக்ஸ் ஹாலெசும் தொடங்கினர். ஹாலெஸ் 13 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து ஜோ ரூட் இறங்கினார். 16 ஓவர்களில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 80 ரன்களுடன் ஓரளவு திடமான நிலையிலேயே இருந்தது.

இங்கிலாந்து 211 ரன்

இந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த பேர்ஸ்டோவின் (43 ரன், 57 பந்து, 4 பவுண்டரி) விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஹசன்அலி கபளகரம் செய்தார். ரிவர்ஸ் ஸ்விங், சரியான உயரத்தில் விதவிதமான பவுலிங் என்று துல்லியமான பந்துவீச்சு யுக்தியை கடைபிடித்து பாகிஸ்தான் பவுலர்கள் இங்கிலாந்தை திணறடித்தனர்.

எப்போதும் அதிரடி காட்டக்கூடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த முறை தகிடுதத்தம் போட்டனர். ஜோ ரூட் 46 ரன்னிலும் (56 பந்து, 2 பவுண்டரி), கேப்டன் மோர்கன் 33 ரன்களிலும் வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததால், பந்து எல்லைக்கோடு பக்கம் போவதே அபூர்வமாக தெரிந்தது. கடைசி 12 ஓவர்களில் ஒரு முறை மட்டுமே பந்து எல்லைக்கோட்டிற்கு முத்தமிட்டது. அபாயகரமான ஆட்டக்காரர் பென் ஸ்டோக்சும் (34 ரன், 64 பந்து) உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றினார். அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

முடிவில் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த தொடரில் இங்கிலாந்தின் மோசமான ஸ்கோர் இது தான். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளும், ருமான் ரயீஸ், ஜூனைட்கான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் வெற்றி

அடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் பஹார் ஜமானும், அசார் அலியும் இங்கிலாந்தின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினர். 17.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தான் தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும்.

ஸ்கோர் 118 ரன்களாக உயர்ந்த போது பஹார் ஜமான் 57 ரன்களில் (58 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். மற்றொரு தொடக்க வீரர் அசார் அலி 76 ரன்கள் (100 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி வெற்றியை சுபலமாக்கினார். பாகிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பாபர் அசாம் 38 ரன்களுடனும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்), முகமது ஹபீஸ் 31 ரன்களுடனும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

முதல்முறையாக…

சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 3 முறை அரைஇறுதியோடு வெளியேறி இருந்தது. இந்தியா அல்லது வங்காளதேசம் ஆகிய அணிகளில் ஒன்றுடன் பாகிஸ்தான் அணி 18-ந்தேதி இறுதிப்போட்டியில் மோதும்.

லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இங்கிலாந்து அரைஇறுதியில் படுதோல்வி அடைந்து நடையை கட்டியது. ஐ.சி.சி. 50 ஓவர் போட்டிகளில் (உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை) இங்கிலாந்து இதுவரை எந்த பட்டமும் வென்றதில்லை. அந்த சோகம் இந்த முறையும் தொடருகிறது.

ஸ்கோர் போர்டு இங்கிலாந்து

பேர்ஸ்டோ (சி) ஹபீஸ்
(பி) ஹசன் அலி 43
ஹாலெஸ் (சி) பாபர் அசாம்

(பி) ரயீஸ் 13
ஜோ ரூட் (சி) சர்ப்ராஸ்
(பி) ஷதப் கான் 46
மோர்கன் (சி) சர்ப்ராஸ்
(பி) ஹசன் அலி 33
பென் ஸ்டோக்ஸ்(சி)
ஹபீஸ் (பி) ஹசன் அலி 34
ஜோஸ் பட்லர் (சி) சர்ப்ராஸ்
(பி) ஜூனைட் கான் 4
மொயீன் அலி (சி) பஹார்
ஜமான்(பி)ஜூனைட் கான் 11
அடில்ரஷித் (ரன்-அவுட்) 7
பிளங்கெட்(சி) அசார் அலி
(பி) ரயீஸ் 9

மார்க்வுட் (ரன்-அவுட்) 3
ஜாக் பால் (நாட்-அவுட்) 2
எக்ஸ்டிரா 6

மொத்தம் (49.5 ஓவர்களில்

ஆல்-அவுட்) 211

விக்கெட் வீழ்ச்சி: 1-34, 2-80, 3-128, 4-141, 5-148, 6-162, 7-181, 8-201, 9-206
பந்து வீச்சு விவரம்

ஜூனைட் கான் 8.5-0-42-2
ருமான் ரயீஸ் 9-0-44-2
இமாத் வாசிம் 5-0-16-0
ஷதப் கான் 9-0-40-1
ஹசன் அலி 10-0-35-3
முகமது ஹபீஸ் 8-0-33-0

பாகிஸ்தான்

அசார் அலி (பி) ஜாக் பால் 76
பஹார் ஜமான் (ஸ்டம்பிங்)
பட்லர் (பி) ரஷித் 57
பாபர் அசாம் (நாட்-அவுட்) 38
முகமது ஹபீஸ்(நாட்-அவுட்) 31
எக்ஸ்டிரா 13
மொத்தம் (37.1 ஓவர்களில்
2 விக்கெட்டுக்கு) 215
விக்கெட் வீழ்ச்சி: 1-118, 2-173
பந்து வீச்சு விவரம்
மார்க்வுட் 8-1-37-0
ஜாக்பால் 8-0-37-1
பென் ஸ்டோக்ஸ் 3.1-0-38-0
பிளங்கெட் 6-0-33-0
அடில் ரஷித் 10-0-54-1
மொயீன் அலி 2-0-15-0

குறைவான பவுண்டரிகள்….

* இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 15 பவுண்டரிகள் மட்டுமே அடித்தது. ஒரு சிக்சரும் பறக்கவில்லை. 2015-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு முழுமைபெற்ற ஒரு இன்னிங்சில் இங்கிலாந்து எடுத்த குறைந்த பவுண்டரிகள் இது தான். அத்துடன் இந்த காலக்கட்டத்தில்
குறைந்தது 25 ஓவர்களுக்கு மேல் விளையாடிய ஆட்டங்களில் இங்கிலாந்து ஒரு சிக்சரும் அடிக்காததும் இதுவே முதல் முறையாகும்.

* பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, இந்த சாம்பியன்ஸ் கோப்பையில் இதுவரை 10 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பாகிஸ்தான் பவுலர் (இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் அஜ்மல் 8 விக்கெட் எடுத்திருந்தார்) என்ற பெருமையை பெற்றார்.

* இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளின் மூலம் ஒரு நாள் போட்டி அறிமுக வீரர்களாக மொத்தம் 3 பேர் அடியெடுத்து வைத்துள்ளனர். மூன்று பேரும் பாகிஸ்தான் அணியை (பஹார் ஜமான், பஹீம் அஷ்ரப், ருமான் ரயீஸ்) சேர்ந்தவர்கள் ஆவர்.

இங்கிலாந்து கேப்டன் கருத்து

உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இங்கிலாந்தை பதம் பார்த்து விட்டது. தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறும் போது, ‘பர்மிங்காமில் விளையாடி விட்டு வந்த நாங்கள் இங்குள்ள (கார்டிப்) சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி எங்களை மாற்றிக்கொண்டு சரியாக செயல்பட தவறி விட்டோம். எல்லா சிறப்பும் பாகிஸ்தானையே சாரும். அவர்களின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 250 முதல் 260 ரன்கள் எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார்.