சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தியது

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும் அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை குறைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது.

சவுதி அரேபியாவுக்கு முக்கிய பொருளாதார வளமான கச்சா எண்ணெய், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் முக்கிய வருவாய் தரும் மெக்கா, மெதினா புனிததலங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் செல்வம் கொழிக்கும் சவுதி, சிக்கன நடவடிக்கையில் இறங்கிவிட்டது.

அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை(ரூ.19.68 லட்சம் கோடி) குறைத்துக்கொள்ள சவுதி அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அடிப்படை பொருட்களுக்கான வரியையும் 15 சதவீதமாக (3 மடங்கு) உயர்த்தி உள்ளது.

இதுகுறித்து, சவுதி நிதியமைச்சர் முகமது அல் ஜத்தான் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டின் முதல் காலாண்டின் அரசின் வருவாய் 22% குறைந்துவிட்டது. அதாவது 900 கோடி டாலர் பற்றாக்குறை நிலவுகிறது. கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயும் 24% குறைந்துவிட்டது. எனவே அரசின் செலவில் இருந்து, 2,600 கோடி டாலர்களை(10,000 சவுதி ரியால்) குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.

மேலும் சவுதி மக்கள் பெற்று வந்த வாழ்வாதார தொகையையும் ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 1350 கோடி டாலர் மிச்சமாகும். பொருட்களுக்கான அடிப்படை வரி, ஜூலை மாதத்திலிருந்து 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஏழைகளுக்கு கிடைக்கும் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.