சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் பண்டாரி தேர்வு

நியூயார்க்: இந்தியாவை சேர்ந்த, தல்வீர் பண்டாரி, 70, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, நேற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச நீதிமன்றம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தின், தி ஹேக் நகரில் உள்ளது.
பாக்., சிறையில் அடைபட்டுள்ள, இந்தியாவை சேர்ந்த குல்பூஷண் ஜாதவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில்,இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சர்வதேச நீதிமன்ற நீதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஐ.நா., பொதுச் சபை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் நடந்து வருகிறது.
இதற்கு முன் நடந்த சுற்றில், இந்தியா சார்பில் களத்தில் உள்ள, தல்வீர் பண்டாரிக்கும், பிரிட்டன் வேட்பாளர், கிறிஸ்டோபர் கிரீன்வுட்டிற்கும் கடும் போட்டி நிலவியது.

ஐ.நா., பொதுச்சபையில் பண்டாரிக்கும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கிறிஸ்டோபருக்கும் வெற்றி கிடைத்தது. இரண்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, சர்வதேச நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட முடியும்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., பொதுச்சபையில் நேற்று நடந்த தேர்தலில், இந்திய வேட்பாளர் பண்டாரிக்கு, 193 ஓட்டுகளில், 183 ஓட்டுகள் கிடைத்தன.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், மொத்த முள்ள, 15 ஓட்டுகளும், பண்டாரிக்கே கிடைத்தன. இதையடுத்து, போட்டியிலிருந்து, கிறிஸ்டோபர் விலகினார். பண்டாரி, சர்வதேச நீதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்த வெற்றி, இந்தியாவின் ராஜ்ய ரீதியிலான சிறப்பான அணுகுமுறைகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாக கருதப்படுகிறது. பண்டாரி, ஏழு ஆண்டுகள் சர்வதேச நீதிபதியாக செயல்படுவார்.