சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு

இஸ்லாமாபாத்:’சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு வழங்கப்படும்’ என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், உளவு பார்த்ததாகவும், மூன்றாண்டுகளுக்கு முன், குல்பூஷன் ஜாதவ், , பாகிஸ்தான் உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம், மரண தண்டனை விதித்துள்ளது.

அதை எதிர்த்து, இந்திய தரப்பில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின், 17ல், தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘குல்பூஷன் ஜாதவ் மீதான தண்டனையை, பாக்., மறு பரிசீலனை செய்ய வேண்டும்; இந்திய துாதரக அதிகாரிகள், அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், பாக்., வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், முகமது பைசல், ”குல்பூஷன் ஜாதவை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திப்பதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும்; அதற்கான பணிகள் நடக்கின்றன. காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்க அதிபர், டிரம்ப் மேற்கொள்ள உள்ள, மத்தியஸ்தத்தை வரவேற்கிறோம்; அதை, இந்தியா எதிர்த்துள்ளது, துரதிருஷ்டவசமானது,” என்றார்.