சர்ச்சைக்குரிய இ-மெயில் கசிந்த விவகாரத்தில் திருப்பம் அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதர் ராஜினாமா

அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக பதவி வகித்து வந்தவர் சர் கிம் டரோச். இவர் அமெரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் தகுதியில்லாதவர்; பாதுகாப்பற்ற நிலையில் அவர் இருக்கிறார். வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் நிலவுவதாக வெளியாகும் தகவல்களை டிரம்ப் ஏற்க மறுக்கிறார் என கடுமையாக விமர்சித்து இங்கிலாந்து அரசுக்கு இ-மெயில் அனுப்பினார். அது எப்படியோ கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து சர் கிம் டரோச்சை டிரம்ப், மிகப்பெரிய முட்டாள் என சாடினார். சர் கிம் டரோச்சுக்கு பதவி விலக உள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மே முழு ஆதரவு தெரிவித்தார்.

ஆனால் அவரது இடத்துக்கு போட்டியில் உள்ள முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்த விவாதத்தின்போது, சர் கிம் டரோச்சுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டார். இது சர் கிம் டரோச்சுக்கு அதிருப்தியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பிவிட்டார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “நான் விரும்பியபடி எனது பணியை தொடர்வதற்கு தற்போதைய சூழல் சாத்தியம் இல்லாமல் செய்துவிட்டது” என்று கூறினார். இவரது ராஜினாமா மூலம் சர்ச்சைக்குரிய இ-மெயில் விவகாரம் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.