சரக்கு சேவை வரியை குறைத்து சினிமாவை காப்பாற்றுங்கள்; கமல்ஹாசன் மீண்டும் வற்புறுத்தல்

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமுல்படுத்த மத்திய அரசு புதிதாக சரக்கு சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி) முறையை கொண்டு வந்து இருக்கிறது. அடுத்த மாதம் (ஜூலை) 1–ந்தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது.
இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழி படங்களுக்கும் 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு தமிழ் திரைப்பட துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தென்னிந்திய வர்த்தசபையின் அவசர கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டு தமிழ் படங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
வரியை குறைக்க வேண்டும்
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், நிருபர்களிடம் கூறும்போது, சினிமா படங்களுக்கு 28 சதவீதம் சரக்கு சேவை வரி விதித்து இருப்பது பெரிய தண்டனை. இந்த வரி விதிப்பால் படங்கள் தயாரிப்பு குறைந்து வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். வரி சுமை அதிகமானால் நான் உள்பட அனைத்து கலைஞர்களும் சினிமாவை விட்டு விலகும் சூழ்நிலை ஏற்படும். எனவே, வரியை குறைக்க வேண்டும் என்றார்.
கமல்ஹாசன் கருத்து குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் கேட்டபோது, ‘‘அரசுக்கு அழுத்தம் கொடுப்பதால் எந்த வித மாற்றமும் ஏற்படப்போவது இல்லை. வரிவிதிப்பு குறித்து ஒவ்வொரு துறையை சேர்ந்த பிரதிநிதிகளிடமும் நாங்கள் ஆலோசிப்போம். அழுத்தம் கொடுப்பதன் மூலம் எதுவும் செய்துவிட முடியாது என்றார்.
இதற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன் சரக்கு, சேவை வரியை குறைக்குமாறு மத்திய அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அழுத்தம் கொடுக்கவில்லை
இதுகுறித்து நேற்று டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–
‘‘சரக்கு சேவை வரியால் பிராந்திய மொழி படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு சிதைந்துவிடும். எனவே, மாநில மொழி படங்களை காப்பாற்றுமாறு ஜி.எஸ்.டி கவுன்சிலை கேட்டுக்கொள்கிறேன்.
இதனை நிதி அமைச்சருக்கு எனது கோரிக்கையாகத்தான் வைக்கிறேன். நான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’’.  இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.