சபரிமலையில் வாபர் மசூதிக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 தமிழர்கள் கைது – கேரள போலீசார் நடவடிக்கை

சபரிமலை செல்லும் வழியில் உள்ள வாபர் மசூதிக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 தமிழர்களை கேரள போலீசார் கைது செய்தனர்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதனால் கேரளாவில் கலவரங்கள் வெடித்தன.

இதனிடையே சபரிமலை செல்லும் வழியில் எருமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு தமிழகத்தை சேர்ந்த பெண்கள் வர இருப்பதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் திருப்பூரை சேர்ந்த பெண்கள் வாபர் மசூதிக்கு வருகை தருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழக- கேரள எல்லையில் கேரள போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கோவையில் இருந்து வந்த காரை வேலந்தாவளம் சோதனை சாவடியில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் வாபர் மசூதிக்கு செல்ல வந்தவர்கள் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மகளிரணி தலைவி சுசீலாதேவி (வயது 35), துணைத்தலைவி ரேவதி (39), சுசீலாதேவியின் தந்தை முருகசாமி (75), கார் டிரைவர் செந்தில்குமார் (31), நெல்லையை சேர்ந்த மகளிரணி தலைவி காந்திமதி (51), கோவையை சேர்ந்த திருப்பதி (51) என தெரியவந்தது. அவர்கள் மீது கொழிஞ்சாம்பாறை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

அதே சமயம் திருப்பூரில் இருந்து வாபர் மசூதிக்கு புறப்பட தயாராக இந்த இந்து மக்கள் கட்சி மகளிரணி நிர்வாகிகளான நாகஜோதி (35), சாய்குமாரி (30), இந்திராணி (29) ஆகியோரை திருப்பூர் வடக்கு போலீசார் நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

சபரிமலை கோவிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்த விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்சினையில் பா.ஜ.க. தொண்டர் வீட்டில் நேற்று முன்தினம் வெடிகுண்டு வீசப்பட்டது. இதையடுத்து கண்ணூரில் 18 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் சிஜூ வீட்டில் நேற்று அதிகாலை நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க. உள்ளூர் தலைவர் முகுந்தன் வீட்டிலும் வெடிகுண்டை மர்ம நபர்கள் வீசினர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.