சபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 – 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை என்ற ஐ தீகம் பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ என, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐப்பசி மாத பூஜையின் போது, சில இளம் பெண்கள், சபரிமலைக்கு வந்தனர். பக்தர்களின் போராட்டத்தால், அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, 50க்கும் மேற்பட்ட மறுசீராய்வு மனுக்களை, விசாரித்த தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற, முந்தைய உத்தரவுக்கு, தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது.இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை, ஜன., 22ல், விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக நாளை(நவ.,16) மாலை சபரிமலை அய்யப்பன் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் சபரிமலை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் பா.ஜ., உள்ளிடட கட்சியினர் கலந்து கொண்டன. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: செப்.,28 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதன் மூலம், சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே விளக்கமாகும். தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. பக்தர்களின் உணர்வுகளை மாநில அரசு மதிக்கிறது. கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கார்த்திகை மாத பூஜைக்காக கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், சபரிமலைக்கு செல்ல முயன்ற பத்திரிக்கையாளர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.