சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு

சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து, கேரளாவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில், வன்முறை வெடித்தது. கல் வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்களால், மாநிலம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது; 226 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற, ‘சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பக்தர்கள், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் பிந்து, கனகதுர்கா என, 50 வயதுக்கு உட்பட்ட இரண்டு பெண்கள், போலீஸ் உதவியுடன், சபரிமலையில் நேற்று முன்தினம் தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘சபரிமலை கர்ம சமிதி’ என்ற அமைப்பு சார்பில், நேற்று, முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முழு அடைப்பில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மலப்புரம் தவலுாரில், மார்க்சிஸ்ட் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது.

திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த, பாத்திமா என்ற பெண்ணுக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக, ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அவர் உயிரிழந்தார். கோழிக்கோட்டில் முக்கிய சாலைகளில் டயர்களுக்கு தீ வைத்து, தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. கொட்டாரக்கரையில், பா.ஜ.,- மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஆறு பேர் காயமடைந்தனர்.

திருவனந்தபுரம் அருகே, நெடுமங்காட்டில் திறந்திருந்த ஒரு தனியார் வங்கியை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், சிலரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நெடுமங்காடு போலீஸ் ஸ்டேஷன் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், எஸ்.ஐ., ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பாலக்காட்டில், பதற்றமான சூழல் நிலவியது. சபரிமலை கர்மசமதி உறுப்பினர்கள் மீது, கல்வீசப்பட்டதை தொடர்ந்து, விக்டோரியா கல்லுாரியின் தங்கும் விடுதியை, பா.ஜ.,வினர் அடித்து உடைத்தனர்.

அதன் அருகில் இருந்த, இந்திய கம்யூ., அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. இங்கு, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தை கலைத்தனர். பாலக்காடு, எஸ்.பி., உட்பட, 15-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.

கோழிக்கோடு மிட்டாயி தெருவில், கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றை அடைக்க, பா.ஜ.,வினர் மற்றும் கர்ம சமிதியினர் வற்புறுத்திய போது, மோதல் ஏற்பட்டது. இங்கு, ஐந்து கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி, அவர்களை விரட்டினர். இங்கு, 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் மாலையில், பந்தளத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில், பந்தளம் குறம்பாலகுற்றியை சேர்ந்த, சந்திரன் உண்ணித்தான், 55, படுகாயமடைந்து, கோட்டயம் மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் இறந்தார். பா.ஜ., அனுதாபியான இவரை, மார்க்சிஸ்ட் கட்சியினர் கொலை செய்து விட்டதாக, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அவர், மாரடைப்பால் இறந்ததாக, முதல்வர் பினராயி கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில், முதல்வர் பினராயி விஜயன் சென்ற காரை வழிமறிக்க, இளைஞர் காங்கிரசார் சிலர் முயற்சித்தனர். அப்போது, முதல்வர் காருக்கு முன் வந்த பாதுகாப்பு வாகனம் மோதியதில், மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலையில் முதற்கட்ட மோதல் முடிந்த பாலக்காட்டில், மாலையில், மார்க்சிஸ்ட், பா.ஜ., தொண்டர்கள் நேருக்கு நேர் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி, நிலைமையை கட்டுப்படுத்தினாலும், பதற்றம் நீடிக்கிறது. வன்முறையில் ஈடுபட்டதாக, மாநிலம் முழுவதும், 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 334 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலில் உள்ளனர். 100க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன.

சபரிமலை விவகாரம் குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெண்கள் வந்ததால், நடை அடைத்து பூஜை நடத்தியது விசித்திரமானது; இது நீதிமன்ற அவமதிப்பு. தந்திரியின் கருத்து கேட்ட பின் தான், பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. எனவே, நீதிமன்றத்தை அவமதித்த தந்திரி, பதவி விலகுவதே நல்லது. பெண்கள் சபரிமலை வந்த போது, போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது; இது அரசின் கடமை. மீண்டும் பெண்கள் வந்தால் பாதுகாப்பு அளிப்போம். பெண்கள் தரிசனம் முடிந்து திரும்பிய பின், பல மணி நேரம் எந்த பிரச்னையும் இல்லை. அதன் பின் தான், சிலர் அரசியல் லாபத்துக்காக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.