‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது

‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது. நிலவை ஆய்வு செய்யும் முயற்சியில், இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை வெற்றிக்கு காரணமான, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு, நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நிலவின் தென்துருவ பகுதியில், கனிம வளங்கள், தண்ணீர் இருப்பு உள்ளதா, மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, ‘சந்திரயான் — 2’ என்ற, விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’ உருவாக்கியது. அந்த விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இஸ்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘சதீஸ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தின், 2வது ஏவுதளத்தில் இருந்து, நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.

‘ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 – எம் 1’ ராக்கெட், ‘சந்திரயான் – 2’ விண்கலத்தை சுமந்தபடி, நேற்று மதியம், 2:43 மணிக்கு, விண்ணில் பாய்ந்தது. தரையில் இருந்து புறப்பட்ட, 16 நிமிடங்கள், 33 வினாடிகளில், ‘சந்திரயான் — 2’ விண்கலம், புவி வட்டப் பாதையில், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
மொத்தம், 3,850 கிலோ எடையுள்ள, ‘சந்திரயான் — 2’ விண்கலம், நேற்று முதல், 23 நாட்களுக்கு, குறைந்தபட்சமாக, 170 கி.மீ., துாரத்திலும், அதிகபட்சமாக, 39 ஆயிரத்து, 120 கி.மீ., துாரத்திலும், புவி வட்டப் பாதையில் சுற்றிவரும். பின், நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு, அந்த விண்கலம் மாறும்.
நிலவிலிருந்து, 100 கி.மீ., தொலைவில், ‘சந்திரயான் – 2’ விண்கலம் இருக்கும்போது, அதிலிருந்து, ‘லேண்டர்’ என்ற கருவி, தனியே பிரிந்து, நிலவை நோக்கி செல்லும். அப்போது, மணிக்கு, 6,000 கி.மீ., வேகத்தில் செல்லும். தொடர்ந்து, அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, 48வது நாளில், புவியிலிருந்து, 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் உள்ள நிலவில், லேண்டர் என்றஆய்வுக் கருவி தரையிறங்கி, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
இதுகுறித்து, இஸ்ரோ தலைவர், கே.சிவன், சக விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:

இந்திய வரலாற்றில், இது சிறப்புமிக்க நாள். ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், ‘சந்திரயான் — 2’ விண்கலத்தை, திட்டமிட்டதைவிட, 6,000 கி.மீ., அதிக துார புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளோம். இதனால், நாளைக்கு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விஞ்ஞானிகள் செய்ய வேண்டிய பணிகளை, இன்றே ராக்கெட் செய்து விட்டது.
இம்மாதம், 15ம் தேதி, ‘சந்திரயான் — 2’ஐ, விண்ணில் ஏவ இருந்த கடைசி நேரத்தில், ராக்கெட்டில் இருந்த தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அது, 36 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. இதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பே காரணம்; அவர்களுக்கு, என் பாராட்டுக்கள்.
ஜி.எஸ்.எல்.வி., வகையில், இதுவரை ஏவிய ராக்கெட்டுகளை விட, தற்போது ஏவிய ராக்கெட்டின் செயல்பாடு, 15 சதவீதம் வரை, கூடுதல் சிறப்பாக இருந்தது. நிலவை ஆய்வு செய்ய ஒரே விண்கலத்தில் ‘ஆர்பிட்டர் லேண்டர் ரோவர்’ என மூன்று அதிநவீன ஆய்வுக் கருவிகள் அனுப்புவது இதுவே முதல்முறை.செயற்கைகோள் குழு ஒன்றரை ஆண்டுகள் கடினமாக உழைத்து ‘சந்திரயான் — 2’ விண்கலத்தை வடிவமைத்துள்ளது.
தற்போது விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம் ஒன்றரை மாதங்களில் 15

முக்கியமான பகுதிகளை கடந்து செல்லும். இது நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கக்கூடிய கடைசி 15 நிமிடங்கள் திகில் நிறைந்ததாகவே இருக்கும். ‘சந்திரயான் — 2’ விண்கலத்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்தன. இந்த விண்கலத்துடன் இஸ்ரோவின் வேலைகள் முடியவில்லை. தொடர்ந்து முக்கியமான செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படும்.
இந்திய தேசியக் கொடி விண்வெளி துறையில் உயரப் பறக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் பேசினார். ‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

சந்திரயான் – 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

‘சந்திரயான் — 2’ விண்கலத்தில் ‘ஆர்பிட்டர் லேண்டர் ரோவர்’ என மூன்று ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 2379 கிலோ எடையுடைய ஆர்பிட்டர் கருவி நிலவின் மேற்பரப்பில் சுற்றிவந்து ஆய்வு செய்யும். நிலவின் புகைப்படங்களை எடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பயலாலுவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இதன் ஆயுட்காலம் ஓராண்டு.

நிலவிலிருந்து 100 கி.மீ. துாரத்தில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ‘சந்திரயான் – 2’ சுற்றி வரும் போது அதிலிருந்து 1471 கிலோ எடையுடைய லேண்டர் கருவி தனியே பிரிந்து நிலவில் தரையிறங்கும். இதில் சூரிய சக்தியில் இருந்து 650 ‘வாட்ஸ்’ மின்சாரம் பெறும் வகையில் சூரிய சக்தி தகடுகள் என்ற ‘சோலார் பேனல்’கள் பொருத்தப்பட்டுள்ளன.
லேண்டரில் இருந்து 27 கிலோ எடையில் ஆறு சக்கரங்களுடைய ரோவர் என்ற ‘ரோபோட்டிக்’ வாகனம் தரையிறங்கும். இது 500 மீட்டர் துாரம் சென்று நிலவில் உள்ள கனிம வளங்கள் நில அதிர்வுகள் தண்ணீர் இருப்பை புகைப்படங்களாகவும் வெப்பம் போன்ற விபரங்களையும் சேகரித்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்.லேண்டர் மற்றும் ரோவர் ஆய்வு கருவிகளின் ஆயுள்காலம் 14 நாட்கள்.