சட்ட விரோத குடியேற்றம்: கட்டாயம் வெளியேற்றம்

இந்தியா முழுவதிலும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமித்ஷா, சரியான குடிமக்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். எனவே ஜூலை 31 ம் தேதி வரை அவகாசம் என சுப்ரீம் கோர்ட்டில் கேட்டுள்ளோம். சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் மற்றும் ஊடுருவியர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுபிடித்து, சர்வதேச குடியுரிமை சட்டத்தின்படி நாடு கடத்துவோம். பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதியில் இதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என சில பெயர்கள் தேசிய குடியுரிமை பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சில பெயர்கள் தவறாக சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசுக்கு 25 லட்சம் கோரிக்கைகள் வந்துள்ளன. இறுதி என்ஆர்சி பட்டியலில் எந்த தவறும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்றார்.