சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர் : அமித் ஷா

”அசாமில் மட்டுமல்ல, நாடு முழுவதும், சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் வெளியேற்றப்படுவர்,” என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா உறுதிபட கூறியுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான, அசாமில், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், முறையான ஆவணங்கள் இல்லாமல், சட்ட விரோதமாக குடியிருந்ததாக, 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ‘அனைத்து வாய்ப்புகளும் தரப்பட்டு, சட்டவிரோதமாக குடியிருப்பது உறுதியானால் வெளியேற்றப்படுவர்’ என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான, வடகிழக்கு முற்போக்கு கூட்டணியின் கூட்டம், அசாம் மாநிலம், கவுஹாத்தி யில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய, வடகிழக்கு மாநில முதல்வர்கள் கூறியதாவது: ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதுபோல, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும், 371வது பிரிவை நீக்கக் கூடாது. குடியுரிமை திருத்த மசோதாவை, வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தக் கூடாது. இவ்வாறு, அவர்கள் பேசினர்.

குடியுரிமை திருத்த மசோதாவின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற வற்றில் சிறுபான்மையினராக இருந்த, ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர், ஏழு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால், அவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும். லோக்சபாவில் நிறைவேறிய இந்த மசோதா, வடகிழக்கு மாநிலங்கள் உட்பட, பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை.

இந்நிலையில், வடகிழக்கு மாநில முதல்வர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷா கூறியதாவது: அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு என்பது, தற்காலிகமான ஒன்று. ஆனால், 371வது பிரிவு நிரந்தரமானது. அதை நீக்க மாட்டோம் என்ற உறுதியை அளிக்கிறோம். அதனால், குடியுரிமை திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்படுவதால், வடகிழக்கு மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியையும் அளிக்கிறோம்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்காததுடன், அதன் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை, காங்., அரசுகள் எடுக்கவில்லை. அதனால் தான், இந்த மாநிலங்களில், வன்முறை, பயங்கரவாத பாதிப்பு இருந்தது. நாட்டின் மற்ற மாநிலங்களைப் போலவே, வடகிழக்கு மாநிலங்களிலும் வளர்ச்சி உருவாக்குவதே, பா.ஜ.,வின் நோக்கம், இலக்கு.

சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள், அசாமில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந் தும் வெளியேற்றப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, எட்டு வடகிழக்கு மாநில முதல்வர்களுடனும், அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.