சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களை கைது செய்கிறது மலேசியா

ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக பணிபுரியும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்யவுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களின் மூலம் நோய்த்தொற்று பரவல் அதிகமாவதை தடுக்கவே அவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த அதிகாரிகள், ஆவணங்கள் இல்லாத பல வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்தது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.