சட்டப்படி இளையராஜா செய்தது சரியே: பாடலாசிரியர் மதன் கார்க்கி

சட்டப்படி இளையராஜா செய்தது சரிதான் என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூகவலைத்தளத்தில் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸுக்கு, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சட்டப்படி இளையராஜா செய்தது சரிதான். ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்குச் சொந்தமானதாகும்.

ஆனால் நட்பு ரீதியாகப் பார்த்தால், அது சரியில்லை. நோட்டீஸுக்கு பதிலாக ஒரு போன் அழைப்பு எல்லா விஷயங்களையும் சுமூகமாகத் தீர்த்திருக்கும்.

எங்கெல்லாம் திரை அரங்குக்கு வெளியே ஒரு பாடல் பாடப்படுகிறதோ, அதற்கான ராயல்டி வசூலிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும்.

ஐபிஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் ராயல்டி தொகையை வசூலித்து அதை உரியவர்களிடம் வழங்கிவருகின்றன. அந்நிறுவனத்துக்கு இளையராஜா அனுமதி அளிக்காவிட்டாலும் கூட, அவரால் தன் பாடலுக்கான முழுத் தொகையையும் பெற முடியாது.

ஏன், இளையராஜாவே ஒரு பொது இடத்தில் தான் இசையமைத்த பாடல்களை அரங்கேற்றுகிறார் என்றால், அதற்கான ராயல்டி தொகையை பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கும் அளிக்க வேண்டும்.

இதுகுறித்து பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் பட்சத்தில், அவராலும் முன் அனுமதியின்றி பாடல்களை இசைக்க முடியாது.

இந்த சம்பவம் பலருக்கும் கசப்பான அனுபவங்களைத் தந்திருந்தாலும், இதை இளையராஜா பொதுவெளிக்குக் கொண்டுவந்ததற்காக சந்தோஷப்படுகிறேன். இதன்மூலம் ராயல்டி குறித்து அனைவரும் புரிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.