சட்டசபையில் வேளாண் சட்ட நகலை கிழித்து கெஜ்ரிவால் புதிய நாடகம் !!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தான் ஆதரித்த அதே வேளாண் சட்ட நகலை முதல்வர் கெஜ்ரிவால் கிழித்து புதிய நாடகம்.

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், விவசாயிகளுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி மற்றும் சுகாதார பணிகளை டில்லி அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக விவாதிக்க டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் கெஜ்ரிவால், வேளாண் சட்ட நகலை கிழித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், சட்டசபையில், வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்தேன். மத்திய அரசு, ஆங்கிலேயர்களை விட மோசமானவர்களாக மாறிவிடக்கூடாது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள காலத்தில், வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றியதன் காரணம் என்ன? ஒவ்வொரு விவசாயியும் பகத் சிங்காக மாறியுள்ளனர். விவசாயிகளுடன் பேசி, வேளாண் சட்டம் தொடர்பாக விளக்குவோம் என மத்திய அரசு சொல்கிறது. இந்த சட்டத்தால், விவசாயிகள் பயன்பெறுவார்கள். அவர்களின் நிலம் பறிக்கப்படாது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தான் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபமா? இவ்வாறு அவர் பேசினார்.

சட்டசபைக்கு வெளியே கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது: 3 வேளாண் சட்டங்களை டில்லி சட்டசபை நிராகரித்துள்ளது. அந்த சட்டங்களை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என மத்திய அரசை கேட்டு கொள்கிறோம். கடந்த 20 நாட்களில் 20 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டத்தில், தினமும் ஒரு விவசாயி உயிரிழந்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.