சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை – முதல்வர் இ.பி.எஸ்

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவை புறக்கணிக்கும் வகையில், ‘அவரால், நான் முதல்வராகவில்லை; எம்.எல்.ஏ.,க்களால் தான் முதல்வரானேன்’ என, முதல்வர் இ.பி.எஸ்., பகிரங்கமாக கூறியுள்ளது, ஆளும் கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன், ‘ஆளுமை மிக்க தலைவராக, முதல்வர் இ.பி.எஸ்., திகழ்கிறார்’ என்ற, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பாராட்டு பேச்சும், அ.தி.மு.க., தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இம்மாத இறுதியில், பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி, சென்னை வரும் சசிகலாவுக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால், சசிகலாவை புறக்கணித்து, அவரை சேர்க்காமல், அ.தி.மு.க.,வை வழி நடத்திச் செல்ல, முதல்வர் இ.பி.எஸ்., விரும்புகிறார்.

அதற்கு முத்தாய்ப்பாக, ‘சசிகலாவால் நான் முதல்வராகவில்லை; எம்.எல்.ஏ.,க்களால் தான் முதல்வரானேன்’ என, இ.பி.எஸ்., கூறி வருகிறார். ‘தி.மு.க.,வை எதிர்க்க வேண்டுமெனில், சசிகலா போன்றவர்களையும், அ.தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என, சென்னையில் நடந்த, ‘துக்ளக்’ பத்திரிகை ஆண்டு விழாவில், ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.
அவரது பேச்சை, இ.பி.எஸ்., ரசிக்கவில்லை. ‘குருமூர்த்தி தன் ஆலோசனையை, அமெரிக்காவைச் சேர்ந்த டிரம்பிடம் கூறட்டும்’ என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கிண்டலடித்துள்ளார்.