சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான 65 சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு, 2017 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன், ஜெ., இறந்து விட்டதால், அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் நான்கு ஆண்டு தண்டனை காலம், 2021 பிப்ரவரியில் முடிகிறது. முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு எதிரே உள்ள 10 கிரவுண்ட் இடம் சசிகலாவுக்கு சொந்தம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த இடம் உட்பட தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள, சசிகலாவுக்கு சொந்தமான 65 சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.300 கோடி. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை இந்நடவடிக்கை எடுத்துள்ளது.