‘சங்கமித்ரா’ சரித்திர படத்தில் சுருதிஹாசனுக்கு பதில் நயன்தாரா?

‘பாகுபலி–2’ படத்துக்கு பிறகு சரித்திர படங்கள் பக்கம் திரையுலகம் திரும்பி இருக்கிறது. சுந்தர்.சி. 8–ம் நூற்றாண்டு கால கட்டத்தை பின்னணியாக வைத்து ‘சங்கமித்ரா’ என்ற பெயரில் புதிய சரித்திர படத்தை டைரக்டு செய்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் ரூ.250 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் கதாநாயகர்களாக நடிக்க ஜெயம்ரவி, ஆர்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கதாநாயகியாக இளவரசி வேடத்தில் நடிக்க சுருதிஹாசனை தேர்வு செய்தனர். இதற்காக அவர் வெளிநாட்டுக்கு சென்று பல மாதங்கள் வாள் சண்டை பயிற்சி எடுத்து திரும்பினார். பின்னர் ஜெயம்ரவி போர்க்கப்பலில் பயணிப்பதுபோன்றும் சுருதிஹாசன் வாளுடன் குதிரையில் பாய்வதுபோன்றும் முதல் தோற்ற படங்களை வெளியிட்டனர்.
சுருதிஹாசன் விலகல்
பாகுபலி போன்று அரண்மனை அரங்குகள், போர் வீரர்களுக்கான உடைகள், யுத்த தளவாடங்கள் அனைத்தையும் தயார் செய்து படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டனர்.
ஆனால் சுருதிஹாசன் திடீரென்று படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் நடிக்க இயலாது என்று விலகி விட்டார். முழுமையான திரைக்கதையை தனக்கு வழங்காததாலும் படப்பிடிப்பு தேதிகளை முடிவு செய்யாததாலும் அவர் விலகியதாக கூறப்பட்டது.
தற்போது சுருதிஹாசனுக்கு பதிலாக புதிய கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இதில் ஒருவர் கதாநாயகியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா
நயன்தாரா தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக வேலைக்காரன் மற்றும் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு சங்கமித்ரா படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சில புதுமுக நடிகைகளையும் பரிசீலிக்கின்றனர். விரைவில் கதாநாயகி யார் என்பதை முடிவு செய்து அறிவித்து விட தயாரிப்பாளர் தரப்பில் திட்டமிட்டு உள்ளனர்.