கோவில் சொத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு சர்ச், மசூதி உள்ளிட்ட பிற வழிபாட்டு தலங்களுக்கு உரிய சொத்துக்களையும் பயன்படுத்தலாம்

கேரள வெள்ள சீரமைப்பு பணிகளுக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் சொத்துக்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற கருத்துக்கு திருவிதாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள ரகசிய பாதாள அறைகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி திறக்கப்பட்டன. அவற்றில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளது தெரிய வந்தது. கோவில் பாதுகாப்பு மற்றும் சொத்துக்கள் குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், சீரமைப்பு பணிகளுக்கு பத்மநாபசாமி கோவில் சொத்துக்களை பயன்படுத்தலாம் என்ற கருத்து சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த கோவிலுடன் தொடர்புடைய திருவிதாங்கூர் அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஆதித்ய வர்மாவிடம் இது குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:

சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோவில் சொத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு நின்று விட கூடாது. சர்ச், மசூதி உள்ளிட்ட பிற வழிபாட்டு தலங்களுக்கு உரிய சொத்துக்களையும் இதற்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணம் வர வேண்டும். இந்த விஷயத்தில் கேரள அரசு தனது கருத்தை வெளியிட வேண்டும். அப்போது தான் அரச குடும்பம் தனது நிலையை தெரிவிக்க முடியும்.

இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் ஒரு முடிவு எடுக்கட்டும். மற்றவர்கள் கூறுவது போல பத்மநாபசாமி கோவில் பாதாள அறைகளில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், ஆபரணங்கள் இல்லை. ஆயிரம் கிலோ தங்க நகைகள் தான் உள்ளன என எங்கள் முன்னோர் கூறியுள்ளனர்.