கோவில் அடிமை நிறுத்து – “அழிந்துவரும் தமிழக கோவில்கள்”சத்குருவுக்கு பிரபலங்கள் ஆதரவு

தமிழகத்தில் சிதிலமடைந்த கோவில்களின் வீடியோக்களை, பகிர்ந்த சத்குருவுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, பல நுாறு கோவில்கள் முறையாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தை துவக்கினார்.

இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட கோவில்களின் வீடியோ, போட்டோக்களை பக்தர்கள் டுவிட்டரில் பதிவிட்டனர். அவற்றை, சத்குரு பகிர்ந்துள்ளார். அதற்கு, பிரபலங்கள், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ‘ஹேஷ்டேக்’ பயன்படுத்தி ஆதரவு தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ‘பையோகான்’ நிறுவனத் தலைவர் கிரண் மசூம்தார், முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் நாகேஸ்வர ராவ், நடிகைகள் கங்கனா ரணவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி, ரவினா டான்டன், மவுனி ராய் மற்றும் சினிமா இயக்குனர் மோகன், பா.ஜ., தமிழக பொறுப்பாளர் ரவி உள்ளிட்ட பலர், டுவிட்டரில் ஆதரவு அளித்துள்ளனர். தமிழக அளவில், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ‘ஹேஷ்டேக்’ டிரெண்டிங் ஆகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் சேவாக், “நம் கோவில்களின் நிலையை பார்க்கும்போது, வேதனை அளிக்கிறது. முறையான நிர்வாக அமைப்பை உருவாக்கி, பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த முன்னெடுப்பில் சத்குருவுடன் இருக்கிறேன்,” என, தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது பதிவில், “நம் புனித ஸ்தலங்களில் நடக்கும் இதயமற்ற சுரண்டல்களை பார்த்து மனம் வலிக்கிறது. மற்ற வழிபாட்டு ஸ்தலங்களை போல், நம் கோவில்களும் விடுதலை பெற வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதிவ்யா, “இது மதம் பற்றிய விஷயம் அல்ல. சமூகத்தில் ஒரு தரப்பினருக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி,” எனக் கூறியுள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத், “இது, இதயத்தை நொறுங்க செய்கிறது. நம் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்காக எழுந்து நிற்காமல் இருப்பது அவமானமாக இருக்கிறது,” என, பதிவிட்டுள்ளார்.

சத்குரு கூறியுள்ளதாவது: தமிழக கோவில்களின் அவலநிலையை பார்த்து, உருவான வலியால் ‘கோவில் அடிமை நிறுத்து’ இயக்கத்தை துவங்கினோம். எங்கள் வேதனையை வெளிப்படுத்தவே துவக்கியுள்ளோம். நம் கோவில்கள் சிதைக்கப்பட்டு வருவதாக, ‘யுனெஸ்கோ’ அமைப்பே கூறியுள்ளது.

ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்துள்ளன. அக்கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். அதற்காக, இன்று நான், 100 ‘டுவிட்’களை பதிவிட உள்ளேன். மதங்களை கடந்து அனைவரும் ஆதரவு கொடுங்கள். இது, ஹிந்துக்களை பற்றியது மட்டும் அல்ல. நம் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைக்கு இழைக்கப்பட்ட அநீதி. நாம் ஒன்றிணைந்து, தமிழக கோவில்களை அரசு பிடியில் இருந்து விடுவிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.