கோவா முதல்வர் வேட்பாளர் முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்ஸ்: ஆம் ஆத்மி அறிவிப்பு

பனாஜி: கோவா சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்சை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, அக்கட்சியின் கவனம் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப், குஜராத் மற்றும் கோவா மாநிலங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இதற்காக இந்த மாநிலங்களில் முதல்வர் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரங்களை தற்போது தீவிரமாக மேற்கொண்டு செய்து வருகிறார்.  இதன் தொடர்ச்சியாக, முன்னாள் சிறைத்துறை ஐஜி எல்விஸ் கோம்சை கோவா மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி தேர்வு செய்து அறிவிப்பு வௌியிட்டுள்ளது. தெற்கு கோவாலின் கன்கோலிம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார்.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள 53 வயதான எல்விஸ் கோம்ஸ், விருப்ப ஓய்வு பெற்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். சமீபத்தில் கோவா கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் தேர்வானார்.  சிறைத்துறையின் ஐஜி மற்றும் மத்திய நகர்புற மேம்பாட்டு வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தபோது தாமாக முன்வந்து ஓய்வு பெற்றார். முன்னதாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் இயக்குனர், கோவா வீட்டு வசதி வாரிய தலைவர், பனாஜிம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறைமுக தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

டெல்லியை அடுத்து தேர்தலுக்கு முன்னதாக கோவாவில் தான் அக்கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால், இதேபோன்ற நடவடிக்கையை பஞ்சாபில் எடுக்க அக்கட்சி தயக்கம் காட்டி வருகிறது. போட்டி அதிகமாக உள்ளதாலும், முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் கட்சியில் குழப்பம், பிளவு ஏற்படும் எனவும் அக்கட்சி அஞ்சுவதே பஞ்சாபில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.