கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே – விக்னேஸ்வரன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை இந்தியா மற்றும் அமெரிக்கா விரும்பாது என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிவரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக கூறப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இருந்தாலும், அமெரிக்கா கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்த பார்க்கும் என கூறியுள்ள அவர், அது தமிழ் மக்களுக்கு சார்பாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான செல்வாக்கு அமெரிக்காவில் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அது தமிழர்களுக்கு சாதகமாகவே காணப்படும் என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.