கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யவேண்டும் : இலங்கை இஸ்லாமியர்கள் எதிர்ப்பை மீறி அறிவித்த அரசு

எவரேனும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பதற்கு நேரிட்டால், அவரது பூதவுடலை முறையான அதிகாரிகளால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அத்தியாவசிய கடமைகளை பெறுபேற்கும் நபர் தவிர்ந்த வேறு எவரிடமும் கையளித்தல் ஆகாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தகைய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடமொன்றில் பூதவுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை 800க்கும், 1200ற்கும் இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூதவுடலை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் அந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளும் மீள பயன்படுத்தப்படாத வண்ணம், பூதவுடலுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூதவுடன் சாம்பலானதும், உறவினர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க அவரது சாம்பல் உறவினர்களிடம் கையளிக்க முடியும் என வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.