கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு !!

பிரிட்டனில் கடந்த இரு வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

பிரிட்டன் சுகாதார அமைச்சர் மாட் ஹானோக், ‛ பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரண்டாவது தடவையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்த திட்டம் உள்ளது. வடகிழக்கு பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் இரு மடங்காகி வருகிறது. ஊரடங்கு என்பது கடைசி முயற்சியாக இருக்கும். மண்டலவாரியாகவும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மக்களின் உயிரை காப்பாற்ற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரிட்டனில் இதுவரை மொத்தம் 3,85,936 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,322 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அங்கு மொத்தம் 41,732 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.