‘கொரோனா’ பயம் பரோலில் செல்ல மாட்டேன் – சின்னம்மா சசிகலா

‘கொரோனா வைரஸ்’ பரவல் காரணமாக, பரோலில் செல்ல, சசிகலா மறுத்து விட்டதாக, அ.ம.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும், சிறை கைதிகள், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடமும், ‘பரோல்’ விடுப்பில் செல்லுமாறு, சிறை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு, 100 நாட்கள் வரை, பரோலில் செல்வதற்கு அனுமதி உள்ளது.சசிகலா பரோலில் செல்லலாம் என, சிறை நிர்வாகம் கூறியும், அவர் விரும்பவில்லை. தன் வழக்கறிஞர்களிடம், ‘பரோல் கேட்டு, எந்த மனுவும் தாக்கல் செய்ய வேண்டாம்’ என, சசிகலா கூறி விட்டார்.இதுகுறித்து, அ.ம.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சசிகலா, நேற்று முதல் ஒரு மாத பரோலில் வெளியே வருவதாக இருந்தது.பெங்களூரு, சென்னை, தஞ்சாவூர் நகரங்களில், ஏதாவது ஒன்றில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை, உறவினர்கள் செய்தனர். ஆனால், சசிகலா வெளியே வர விரும்பவில்லை. கொரோனா பயம் காரணமாக, வெளியே தனியாக இருப்பதை விட, சிறையில் தனியாக இருப்பதே நல்லது என, சசிகலா கருதுகிறார்.

மேலும், தன் தம்பி திவாகரின் மகன் திருமணம், சமீபத்தில் நடந்தது. அதற்கும் வர சசிகலா மறுத்து விட்டார். அதனால், இப்போது வருவது சரியாக இருக்காது என, நினைக்கிறார்.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.ஆனால், ஏற்கனவே, ஜெயலலிதாவுடன் சேர்ந்து அனுபவித்த தண்டனை நாட்களையும் கணக்கில் சேர்க்கும் போது, வரும் செப்டம்பரில் விடுதலையாகும் வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், அபராதம், 10 கோடி ரூபாயை, தன் சொந்த வருமானத்தில் இருந்து, அவர் செலுத்த வேண்டும்.ஆனால், சசிகலாவின் சொத்துக்கள் மற்றும் பினாமி நிறுவனங்களை, வருமான வரித் துறையினர் முடக்கி வைத்த வழக்கு நடந்து வருகிறது; அந்த வழக்குகளின் முடிவுக்காக, அவர் காத்திருக்கிறார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன