கொரோனா தொற்று 8 நாள் சிகிச்சைக்குப் பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி திரும்பினார்

சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பின் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார்.இந்தநிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டிலேயே ரங்கசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் நெருக்கமாக இருந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையொட்டி ரங்கசாமியும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவில் அவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளானது.

உடனடியாக கடந்த 9-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரங்கசாமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து கடந்த 8 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் குணமடைந்ததை தொடர்ந்து டாக்டர்கள் அறிவுரையின்படி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து கார் மூலம் புதுச்சேரிக்கு நேற்று மதியம் திரும்பினார். அவர் நேராக கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.பின்னர் அவர், திலாஸ்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரை வரவேற்க வீடு அருகே என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, திருமுருகன் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் திரண்டு இருந்தனர்.

வீட்டுக்கு முன் காரை விட்டு இறங்கிய ரங்கசாமியை பார்த்ததும் எம்.எல்.ஏ.க்களும், கட்சி பிரமுகர்களும் வணக்கம் தெரிவித்து வரவேற்றனர். பதிலுக்கு ரங்கசாமியும் மரியாதை தெரிவித்தார். ஆனால் அவர்கள் யாரையும் தன் அருகே வர வேண்டாம் என்று அறிவுறுத்தினார். தன்னை சந்திக்க விரும்பிய எம்.எல்.ஏ.க்கள், கட்சி பிரமுகர்களுக்கு அவர் அனுமதி மறுத்ததாக தெரிகிறது.இந்த நிலையில் ஒரு வாரம் வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது ரங்கசாமி திரும்பி உள்ளதால் ஏற்கனவே முடங்கிப்போன அமைச்சரவை விரிவாக்கம், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு, சட்டமன்ற கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இனி அடுத்தடுத்து அரங்கேறும் என்பதால் புதுச்சேரி அரசியல் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.