கொரோனா காலத்திய கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி செய்ய இயலாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வங்கி உள்ளிட்ட சேவைகள் முடங்கியதோடு, கடன்களுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் வட்டிக்கு வட்டியாக கூட்டு வட்டித் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மார்ச் முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலான ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடன்களுக்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்த கொரோனா காலத்தில் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசுக்கும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வருவாய் இழப்பு ஏற்பட்டது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி நிதி கொள்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. முழு வட்டியை தள்ளுபடி செய்தால் அது பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தனர்.

முடிவில் கொரோனா ஊரடங்கு காலத்திற்குரிய கடன்களுக்கு முழு வட்டியை தள்ளுபடி செய்ய இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கடன் தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.