கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!

இந்தியாவின், 71வது குடியரசு தின விழா, 2021 ஜன., 26ல் கொண்டாடப்பட உள்ளது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக, வழக்கமான நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக, குடியரசு தின விழாவன்று, ராஜ்பத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படையினரின் அணிவகுப்பை துவக்கி வைப்பார்.இது, 8.2 கி.மீ., துாரத்தில் உள்ள செங்கோட்டையில் முடிவடையும். இம்முறை, முப்படையினரின் அணிவகுப்பு, 3.3 கி.மீ., துாரமாக குறைக்கப்பட்டுள்ளது.

விஜய் சவுக்கில் துவங்கி, தேசிய விளையாட்டு திடலில், அணிவகுப்பு மற்றும் கலாசார ஊர்திகளின் ஊர்வலம் முடிவடையும்.புதிய வழிகாட்டு நெறிகளின்படி, அணிவகுப்பில் பங்கேற்போர், பார்வையாளர்கள் ஆகியோர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

ஒவ்வொரு அணிவகுப்பிலும் பங்கேற்போர் எண்ணிக்கை, 144லிருந்து, 96 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட, 1.15 லட்சம் பேர் அனுமதிக்கப்படுவர்.
இம்முறை, 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அத்துடன், கலாசார நிகழ்ச்சிகளும் குறைக்கப்பட்டுள்ளன.குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

டில்லியில், குடியரசு தின விழா அணிவகுப்பு பயிற்சியில் பங்கேற்க வந்த ராணுவத்தினரில், 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் டில்லி கன்டோன்மென்ட் பகுதியில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.