கேள்விக்குறியாகும் டிரம்பின் தேர்தல் வெற்றி – “கொரோனா, இனவெறி எதிர்ப்பு போராட்டம்”

அமெரிக்காவில், இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர், டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.இந்தாண்டு துவக்கத்தில், டிரம்பிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. மீண்டும் அவரே அதிபராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது, கள நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது.

இது குறித்து, அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், அமெரிக்காவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை, அமெரிக்காவில், 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு பலியாகி விட்டனர். சர்வதேச அளவில் அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ், அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டிரம்ப், தீவிரமாக செயல்படவில்லை என்றும், அதனால் தான் பாதிப்பு அதிகரித்தது என்றும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ் அதிகாரி ஒருவர், ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை கொன்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கை, கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறியை காட்டுவதாக கூறி, 10 நாட்களுக்கும் மேலாக, அமெரிக்கா முழுதும் போராட்டங்கள் நடக்கின்றன. இந்த போராட்டங்கள் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கறுப்பினத்தவர் விஷயத்தில், அதிபர் டிரம்ப் பாரபட்சமாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால், டிரம்பின் செல்வாக்கு வேகமாக சரிந்து வருகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ஜோ பிடன், தேர்தல் பிரசாராங்களில் அதிரடி காட்டி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு, டிரம்பால் ஈடுகொடுக்க முடியவில்லை. பெரும்பாலான மாகாணங்களின் மக்களிடையே, டிரம்பிற்கு எதிரான மனநிலையே நிலவி வருகிறது.